“போனஸ் கேட்டீங்க அவ்ளோதான்…!” ஊழியர்களை மிரட்டும் ரயில்வே வாரியம்!!
போனஸ் கேட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது. மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக். 20ம் தேதிக்கு முன்னர், அதாவது துர்கா பூஜைக்கு முன்னர் ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும். ஆனால், இந்தாண்டுக்கான போனஸ் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. அதனால், அகில இந்திய ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பு (ஏஐஆர்எப்) பேரணி, போராட்டங்களை அறிவித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், இந்திய ரயில்வே வாரியம் அனைத்து பொது மேலாளர்களுக்கும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில், “ரயில்கள் சீராக இயங்குவதை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ரயில்வே ஊழியர்கள் சார்பில் பேரணிகள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட்டால், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றால், அவர்கள் தொடர்பான அறிக்கையை உடனடியாக வாரியத்திற்கு அனுப்பப்பட வேண்டும். சுமூகமான முறையில் ரயில்கள் இயக்கம் நடைபெறுவதை அந்தந்த பொது மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.