லாரியை வழிமறித்து பல கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!!
கிருஷ்ணகிரி அருகே லாரியில் ஏற்றி செல்லப்பட்ட பல கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பூந்தமல்லி பகுதியில் இருந்து லாரி ஒன்றில் எம்.ஐ. செல்போன்கள் ஏற்றப்பட்டு மும்பைக்கு புறப்பட்டது. இந்த லாரியில் இருந்த செல்போன்களின் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள மேலுமலை பகுதியில் இன்று காலை லாரி சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று லாரியின் ஓட்டுநர்களான 26 வயதான அருண் மற்றும் 29 வயதான சதீஸ்குமார் ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு லாரியில் இருந்த செல்போன்கள் அடைக்கப்பட்டு இருந்த 15 பெட்டிகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இதனை அடுத்து தற்போது லாரியின் ஓட்டுனர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.