போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி தொழிலாளியிடம் பணம் பறிப்பு!!

சேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி தொழிலாளியிடம் பணம் பறித்த பட்டதாரி வாலிபர்கள் மற்றும் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டனர். 

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகன் முருகன் (வயது 21). இவர் சேலம் சித்தனூரில் உள்ள ஒரு மளிகை கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சேலம் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரம் நின்று மது அருந்தி உள்ளார். அப்போது அங்கிருந்த 2 பேர் அவரை நோட்டமிட்டபடி இருந்தனர். பின்னர் 2 பேரும் முருகனிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அதற்கு அவர் தரமறுத்து உள்ளார். 

அப்போது ஒருவர் தான் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் என்றும், இன்ஸ்பெக்டர் உங்களை விசாரிக்க அழைத்து வரச்சொன்னார் என்றும் கூறி உள்ளார். ஆனால் முருகன் வர மறுத்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சேர்ந்து முருகனை மோட்டார் சைக்கிளில் ஏற்றினர். பின்னர் அவர்கள் தொழிலாளியை கடத்தி புதிய பஸ் நிலையம் அருகே கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கு வைத்து முருகனை மிரட்டி அவரை தாக்கி அவரிடம் இருந்து ரூ.800 மற்றும் மதுபானம், புரோட்டா ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். மேலும் நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி உள்ளனர். அப்போது அந்த வழியாக பள்ளப்பட்டி போலீசார் ரோந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து நைசாக ஓட முயன்றனர். இதையடுத்து போலீசார் இருவரையும் பிடித்தனர். 

அப்போது முருகன் போலீசாரிடம் அழுதுகொண்டே தன்னை இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்து மிரட்டி பணம் மற்றும் மதுபாட்டில்களை பிடுங்கி கொண்டனர் என்று கூறி உள்ளார். இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஒருவர் சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவரது மகன் மணிகண்டன் (23) என்பதும், மற்றொருவர் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் சுரேஷ் என்கிற ஜெயப்பிரகாஷ் (24) என்பதும் தெரியவந்தது. 

மேலும் அவர்கள் இருவரும் முருகனை கடத்தி பணம் பறித்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன், சேலம் தாதகாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். அதே போன்று சுரேஷ் என்கிற ஜெயபிரகாஷ் பட்டப்படிப்பு படித்துவிட்டு தற்போது போலீஸ் வேலைக்கு போட்டித் தேர்வு எழுதி உள்ளார். மேலும் இவர் தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி முருகனை மிரட்டியதும் விசாரணையில் தெரிந்தது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x