திருநெல்வேலியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இரண்டு திருநங்கைகள்! – மூவர் கைது!!

பாளையங்கோட்டை அருகே 2 திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே திருநங்கைகள் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 30க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வந்தவர் பவானி. இவரைக் கடந்த சில நாள்களாக காணவில்லை. மேலும், அவர், மகாராஜா நகர் பகுதியில் உல்ள முருகன், அனுஷ்கா ஆகியோரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவாராம். இதையடுத்து அங்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சென்ற போது அங்கு முருகனும், அனுஷ்காவும் இல்லை. ஆனால் அவர்கள் வீட்டில் ஆங்காங்கே ரத்தக்கறை இருந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்புவாசிகள், இது குறித்து சுத்தமல்லி போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர். அதில், சேலத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவருடன்தான் கடைசியாக பவானி சென்றதாகவும் கூறப்பட்டது. இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரிஷிகேஷ் உள்பட 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், பவானி, அனுஷ்கா, முருகன் ஆகியோரை கொலை செய்யப்பட்டதாகவும், மகாராஜ நகரில் உள்ள ஒரு வீட்டில் அவர்களின் உடலை போட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். உடனடியாக போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, அவர்கள் கூறியது போல் எதுவும் இல்லை. இதையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது 3 பேரின் உடல்களை சாக்குமூட்டையில் கட்டி பாளையங்கோட்டை கக்கன்நகர் புறவழிச்சாலை அருகே உள்ள 2 கிணற்றில் போட்டதாக கூறினார்.
அதன்படி போலீஸார் அப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது, இரண்டு கிணற்றிலும் சாக்கு மூட்டைகள் மிதந்துள்ளன. அந்த இடங்களுக்கு சென்று உடல்களை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.