ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம்; சீனா அதிரடி
ஹாங்காங் மீதான தன் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் வகையில், சீனா கொண்டு வந்துள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதையடுத்து, சீனாவுக்கு எதிராக இதுவரை போராடி வந்தோர் கைது செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஹாங்காங், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. கடந்த, 1997ல், சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டது. ஒரு நாடு, இரண்டு நடைமுறை என்ற அடிப்படையில், சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங்குக்கு தனி நிர்வாகம் இருக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக, 50 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், பல்வேறு நாடுகளில் ஆக்கிரமிப்புகளை செய்து வரும் சீனா, இந்த ஒப்பந்தத்தை மீறி, ஹாங்காங்கை தன் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கைகளை துவக்கியது.
ஹாங்காங் குற்றவாளிகளை, சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத்தை கொண்டுவர, சீன அரசு கடந்தாண்டு முயற்சித்தது. அதையடுத்து, ஜனநாயக ஆதரவு போராட்டக் குழுவினர், ‘தீவிர போராட்டத்தில் குதித்தனர். இதனால் சீனா கொஞ்சம் பின்வாங்கியது. இந்நிலையில், கொரோனா பாதிப்பால், இந்த போராட்டம் தடைபட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, முதற்கட்டமாக, சீன தேசிய கீதம் அவமதிப்பு தடை சட்டம், ஹாங்காங் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோரை நசுக்கும் வகையிலான, தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஹாங்காங்கில் நடைமுறைப்படுத்த, சீனா நடவடிக்கை எடுத்தது. இதற்கு, அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் இதைப் பொருட்படுத்தாத சீனா, இச்சட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், இந்த சட்டம், ஹாங்காங்கில் உடனடியாக நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டத்தின் கீழ், அரசை கவிழ்க்க, பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் நடவடிக்கைகள், பயங்கரவாத நடவடிக்கைகளாக கருதப்படும். இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால், அவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம். அதேபோல், சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கப்படுவர்.
சட்டம் நிறைவேறிய நிலையில், ஜனநாயக ஆதரவு போராட்டக் குழுவைச் சேர்ந்த, முக்கிய தலைவர்களான, ஜோஷூவா வாங்க், ஆக்னல் ஜோ, நாதன் லா உள்ளிட்டோர், குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அதே நேரத்தில், ஒரு சிலர், ‘போராட்டம் தொடரும்’ என, அறிவித்துள்ளனர்.