பாகிஸ்தான் விமானங்கள் ஐரோப்பிய வான்பரப்பில் பறக்க தடை! ஏன் தெரியுமா?

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள், அடுத்த 6 மாதங்களுக்கு, ஐரோப்பிய வான் பரப்பில் பறப்பதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானிகள் தேர்வில் மோசடி செய்ததாக கூறி, 262 விமானிகளின் லைசன்ஸை, பாகிஸ்தான் அரசு கேன்சல் செய்ததன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சர் கான், ஏற்கனவே நடந்த விமானிகள் தேர்வில், 262 விமானிகள் மோசடி செய்து தேர்ச்சி அடைந்ததாக குற்றஞ்சாட்டினார். அதன்படி, பி.ஐ.ஏ.,வில் இருந்து 141 பேர், ஏர் புளூவில் 9 பேர், செரீன் நிறுவனத்தில் 10 பேர் மற்றும் ஷாகீன் ஏர்லைன்சில் 17 பேர் என 262 விமானிகளின் லைசென்சை ரத்து செய்வதாக அவர் அறிவித்தார். அதில், 50க்கும் மேற்பட்ட விமானிகள் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர்; பலர் பணியில் இல்லை. பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைகக்கு விமானிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு எதிராக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தன.
இந்நிலையில், பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் விமானங்கள் (பி.ஐ.ஏ), அடுத்த 6 மாதங்களுக்கு, ஐரோப்பிய வான் பரப்பில் பரப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய விமான பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தானில் 262 விமானிகள் தேர்வில் மோசடி செய்ததாக கூறி அவர்களின் லைசென்ஸ் கேன்சல் செய்யப்பட்டதை இந்த தடைக்கு காரணமாக காட்டியுள்ளது ஐரோப்பிய விமான பாதுகாப்பு ஆணையம்.
இதனிடையே, ‘பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, மேல்முறையீடு செய்யவும், ஐரோப்பிய ஒன்றிய விமான பாதுகாப்பு அமைப்பின் கவலைகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாகிஸ்தான் அரசு மற்றும் பி.ஐ.ஏ நிறுவன அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கையால், இந்த தடை விரைவில் நீக்கப்படும் என நம்புகிறோம். ’ என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, மேல்முறையீடு செய்வோம். ஐரோப்பிய விமான பாதுகாப்பு அமைப்பின் கவலைகளை சரி செய்வோம். இந்த தடை விரைவில் நீக்கப்படும் என நம்புகிறோம் பாகிஸ்தான் அரசு