“தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 28-ம் தேதி தொடங்கும்!” சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 28-ம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். வடதமிழகத்தின் கடலோர பகுதிகளில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் நேற்று கனமழை பெய்ததாக தெரிவித்தார்.
அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 17 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவித்த பாலச்சந்திரன், அடுத்து வரும் இரு தினங்களுக்கு வடதமிழகம், புதுவையில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை வரும் 28-ம் தேதி தொடங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறினார். மேலும் வங்கக் கடலின் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சில நேரங்களில் கரையைக் கடக்கும் என்பதால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.