கொரோனா அச்சம் காரணமாக ஆமை வேகத்தில் செல்லும் தீபாவளி சிறப்பு ரயில்களின் டிக்கெட் முன்பதிவு!
கொரோனா அச்சம் காரணமாக தீபாவளி சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு மந்தமாக இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் வழக்கமான பயணிகள் ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகள் தேவையைக் கருத்தில்கொண்டு பல்வேறு வழித்தடங்களில் 300-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, அடுத்தடுத்து ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை நாட்கள் நெருங்கவுள்ளதால், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வே மண்டலங்கள் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் 196 சிறப்பு ரயில்கள் (392 இணை ரயில்களாக) நவ.30-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இருப்பினும், பெரும்பாலான வழித்தட சிறப்புரயில்களில் இருக்கைகள் காலியாகவே இருக்கின்றன.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ”கொரோனா ஊரடங்கு சூழ்நிலையில், பயணிகளின் தேவையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வழித்தடங்களில் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கோவை, மதுரை, நாகர்கோவில் போன்ற சில வழித்தட சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது.
ஆனால், பெரும்பாலான வழித்தட சிறப்பு ரயில்களில் 40 சதவீத இருக்கைகள் இன்னும் காலியாகவே இருக்கின்றன. கொரோனாவுக்கு முன்பெல்லாம் சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடங்கி அடுத்த சில நிமிடங்களில் முடிந்து விடும். தற்போது, கொரோனா அச்சத்தால் மக்கள் வெளியூர் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், தீபாவளி நெருங்கும் நேரத்தில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடலாம் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.