குடிகார ஓட்டுனரால் பள்ளத்தில் கவிழ்ந்த வேன்.. இளம்பெண் பரிதாபமாக பலி!!
![](https://thambattam.com/storage/2020/10/accident-1.jpg)
திருக்கழுக்குன்றம் அருகே, தனியார் கம்பெனி மினிவேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில், இளம்பெண் பலியானதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அருகே கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் பகுதியில் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனி செயல்படுகிறது. திருக்கழுக்குன்றம் அருகே தண்டரை உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
அவர்கள், தினமும், மினி வேனில் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வேலை முடிந்து பெண் தொழிலாளர்கள் மினி வேனில் வீட்டுக்கு புறப்பட்டனர். வேனை ஆமூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் அகஸ்டின் (34) ஓட்டி சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
![](https://thambattam.com/storage/2020/10/Tamil_News_Oct20_22_345775783061982-e1603509744818-300x170.jpg)
வேன் சென்று கொண்டிருந்தபோது, டிரைவர் போதையில் இருந்ததால், தாறுமாறாக ஓடியது. இதை கண்டு, அதில் இருந்த பெண்கள் அலறி கூச்சலிட்டனர். நள்ளிரவு 12.30 மணியளவில் அமிர்தபள்ளம் என்ற பகுதியில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், வேனின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பெண்கள் அலறி கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்தனர். வேனில் சிக்கிய பெண்களை பத்திரமாக மீட்டனர். ஆனால், தண்டலம் கிராமத்தை சேர்ந்த அனுசுயா (19) என்பவர், இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
பின்னர், படுகாயமடைந்த மோகனலட்சுமி, கல்பனா உள்பட 5க்கும் மேற்பட்டோரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்து திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.