சீனாவின் வுகான் நகருக்கு பயணம் செய்த 19 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று!!

ஏர் இந்தியா விமானம் மூலம் சீனாவின் வுகான் நகருக்கு பயணம் மேற்கொண்ட பயணிகளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய விமானங்கள் சீனா வர அந்நாட்டு அரசு அனுமதியளித்ததையடுத்து, வந்தேபாரத் திட்டத்தின் கீழ் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனாவுக்கு பின் முதல்முறையாக ஏர் இந்தியா விமானம் வுகான் நகரத்திற்கு பயணம் மேற்கொண்டது. இந்த விமானத்தில் 277 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். ஏர் இந்தியா விமானத்தில் வுகான் நகரை சென்றடைந்தவர்களிடம் வுகான் விமான நிலையத்தில் வைத்து சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
அதில் 19 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதியானது. மேலும், 39 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் சீன நடைமுறைபடி தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தியாவில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து அடுத்தடுத்த வந்தேபாரத் சிறப்புவிமான போக்குவரத்து திட்டங்களுக்கு சீனா அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தங்கள் விமானத்தில் பயணம் செய்த இந்தியர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது தொடர்பாக ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த எங்கள் பயணிகள் அனைவருக்கும் டெல்லியில் இருந்து வுகான் நகருக்கு புறப்படும் முன் அங்கிகரிக்கப்பட்டமையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என்ற முடிவு வந்துள்ளது. அதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.