“கிராம சபை கூட்டம் நடத்தினால் மட்டும் கொரோனா பாதிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது!” டிடிவி தினகரன் பேட்டி

“இந்தியாவின் இதயம் கிராமங்களில் வாழ்கிறது என்று சொன்ன காந்தியடிகளின் பிறந்தநாளில் கிராம சபை கூட்டங்களை தமிழக அரசு ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நேற்று தமிழக அரசு சார்பில் கிராம சபை கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், “இந்தியாவின் இதயம் கிராமங்களில் வாழ்கிறது என்று சொன்ன காந்தியடிகளின் பிறந்தநாளை ஒட்டி மாநிலம் முழுவதும் நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்களை தமிழக அரசு ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது. ஊருக்கு ஊர் வலுக்கட்டாயமாக கூட்டம் திரட்டி, விதிமுறையை பின்பற்றாமல் முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாக்களை நடத்தும் போது, கிராம சபை கூட்டம் நடத்தினால் மட்டும் கொரோனா பாதிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.” என தெரிவித்துள்ளார்.