“உ.பி. அரசு செய்ததுப் போல் பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள் செய்தால், அங்கு சென்று நீதி கிடைக்கப் போராடுவேன்” ராகுல் பதிலடி!!
உத்தரப்பிரதேச அரசு செய்ததைப் போல் பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள் செய்தால், அந்த மாநிலங்களுக்குச் சென்று நீதி கிடைக்கப் போராடுவேன் என காங்கிரஸ் எம்பி., ராகுல் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் சமீபத்தில் 19 வயது பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, பொதுச்செயலர் பிரியங்கா ஆகியோர் அங்கு சென்று அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தை தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் தமது தாத்தாவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் ஆகியோர், “ஹத்ராஸ் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த ராகுலும், பிரியங்காவும், பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூருக்கும், ராஜஸ்தானுக்கும் ஏன் செல்லவில்லை” என கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதலளிக்கும் விதமாக ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். “உத்தரப்பிரதேச அரசைப் போல், ஒரு பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையிலும், பலாத்காரம் நடக்கவே இல்லை என்று பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள் மறுக்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டவும், அவர்கள் நீதி பெறுவதைத் தடுக்கவும் இல்லை. உத்தரப்பிரதேச அரசு செய்ததைப் போல் பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள் செய்தால், நான் அந்த மாநிலங்களுக்குச் சென்று நீதி கிடைக்கப் போராடுவேன்.” இவ்வாறு அவர் பதிவிட்டார்