சீனா நடவடிக்கையால் எல்லையில் பதற்றம்; 30 ஆயிரம் படையினர் குவிப்பு

ஒருபுறம் லடாக்கிலிருந்து படைகளைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா ஈடுபட்டிருந்தாலும், மறுபுறம் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. கட்டுப்பாட்டு எல்லையில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான படையினரை சீனா குவித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தியாவுக்கு சொந்தமான கால்வானில் கடந்த 15 ஆம் தேதி சீனா தாக்குதலை நடத்தியது. இதில், 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட எல்லைப் பதற்றத்தை தணிக்க, கடந்த 22 ஆம் தேதி 2 ஆம் கட்டமாகவும் நேற்று 3 ஆம் கட்டமாகவும் இந்திய-சீன ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், கால்வானில் இருந்து தனது துருப்புக்களை திரும்ப அழைத்துக் கொள்வதாக சீனா உறுதி அளித்து, அதன்படி சில துருப்புக்கள் பின்வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கட்டுப்பாட்டு எல்லை ஊடாக, சீனா 30 ஆயிரத்திற்கும் அதிகமான போர்வீரர்களை குவித்துள்ளது.
அத்துடன், எல்லைப்பகுதிக்கு 48 மணி நேரத்தில் வரக்கூடிய அளவில்,ஜின்ஜியாங்கில் மேலும் 12 ஆயிரம் துருப்புக்களை சீனா நிறுத்தி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்திய எல்லைக்கு அருகில் நடக்கும் சீனாவின் இந்த படைப் பெருக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக டெல்லியில் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், பதற்றம் அதிகரித்து வருகிறது.