அக்டோபர் 1 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதல்வர்!

அக்டோபர் 1ம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் திரையங்குகளை திறக்கலாம் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. பல மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், பொருளாதார சிக்கல் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பலவிதமான தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்களது மாநிலங்களில் சிலவிதமான தளர்வுகளை அறிவித்து வருகின்றன. கொரோனா பரவல் வேகம் இன்னும் கட்டுக்குள் வராததால் ஒவ்வொரு தளர்வின் போதும் பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறப்படுகிறது.
பல மாநிலங்களில், பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, “அக்டோபர் 1 முதல் 50 பார்வையாளர்கள் அல்லது அதற்கும் குறைவான பார்வையாளர்கள் அடங்கக்கூடிய திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. திறந்தவெளி திரையரங்குகளும் திறந்துகொள்ளலாம். மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதில் எந்தவித மாற்றமும் கிடையாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.