மல்லையாவின் மதுபான நிறுவனத்தை முடக்கும் உத்தரவுக்கு தடை கோரிய மனு ; உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

விஜய் மல்லையாவின் மதுபான நிறுவனத்தை முடக்கும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கர்நாடகாவைச் சேர்ந்த, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் இருந்து, 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே, இது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம்,’விஜய் மல்லையாவின், ‘கிங் பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனம் செலுத்த வேண்டிய, 7,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை மீட்பதற்காக, அவரது, ‘யுனைனட் பிரிவரீஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்’ எனப்படும் மதுபான நிறுவனத்தை முடக்கவேண்டும்’ என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, விஜய் மல்லையாவின் மதுபான நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கு விசாரணை, நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி கூறியதாவது:
மல்லையா மற்றும் அவரது நிறுவனத்திடம் இருந்து, 3,600 கோடி ரூபாய் மட்டுமே, மீட்கப்பட்டுள்ளது. 11 ஆயிரம் கோடி ரூபாய் மீட்கப்படவேண்டியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இதையடுத்து, மதுபான நிறுவனத்தை முடக்கும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.