இதயநோய் இறப்புகளைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசு! உலக சுகாதார நிறுவனம் கடும் அதிருப்தி!!

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் இதய நோய் இறப்புகளைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என உலக சுகாதார நிறுவனம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதயநோய்களைக் கட்டுப்படுத்த உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இதய நோய்களைக் கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என உலக சுகாதார நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தொழில்ரீதியாக உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் தீங்கு விளைவிக்கும் பொருட்களால் இதய நோய்கள் அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் 100 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தீங்கு விளைவிக்கும் பொருட்களை அவற்றின் உணவுப் பண்டங்களில் இருந்து அகற்ற போதுமான நடவடிக்கையை கட்டாயம் எடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

தொழில்துறை ரீதியாக உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் கொழுப்பு நிறைந்த பொருட்களால் ஏற்படும் இதய நோய் காரணமாக ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் இறப்புகள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்தியா, ஈரான், மெக்ஸிகோ, நேபாளம், பங்களாதேஷ், பூட்டான், ஈக்வடார், எகிப்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளில் அதிகரித்து வரும் இதய நோய்களுக்குக் காரணமே கொழுப்பு சேர்க்கப்பட்ட உணவுகள் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 53 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.