‘அதிமுக தொண்டன் வெளியே வந்தா நடமாடமாட்டீங்க’ பாஜகவினருக்கு எச்சரிக்கை…
அதிமுக தொண்டர்கள் வெளியே வந்தால் பாஜகவினர் வெளியே நடமாட முடியாது என்று டிவி விவாதத்தில் அதிமுக பிரமுகர் கோவை செல்வராஜ் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

சமீபத்தில், எம்.ஜி.ஆர்.சிலை மீது பாஜகவினர் காவித்துண்டை போர்த்தினர். இது அதிமுக தொண்டர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர் கோவை செல்வராஜ் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகாலத்தில் ஜாதி மத சாயம் பூசிக் கொண்டு செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போதும் காவல்துறைம் உரிய நடவடிக்கை எடுக்கிறது. காவல்துறை யார் சொல்லியும் நடவடிக்கை எடுக்காமல் தாமாகவே தக்க நடவடிக்கை எடுக்கிறது.
இந்த அரசாங்கம் யார் வீட்டு வேலைக்காரரும் அல்ல. அரசாங்கத்தின் அத்தனை பிரிவும் சரியாக செயல்படுகிறது. தமிழகத்தில் அனைத்து அதிகாரிகளுமே சிறப்பாகவே செயல்படுகின்றனர். அதனால் லெட்டர் பேடு கட்சிகள் எங்களை பாரட்ட வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை. இவர்கள் ஒன்றும் ஆதாரமும் கொடுப்பது இல்லை. யார் வேண்டுமானாலும் புகார் தரலாம். காவல்துறையில் புகார் மனு கொடுக்கலாம். காவல்துறைக்கு உண்மை எது? பொய் எது என்பது தெரியும்.
கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த நாடே ஸ்தம்பித்து கிடக்கிறது. இந்த நிலையில் கேவலமாக, தலைவர்கள் சிலைக்கு காவி சாயம் பூசுவது, காவி துண்டு அணிவிப்பது போடுவது என்பதெல்லாம் என்ன அர்த்தம்? இவர்களை எல்லாம் நாட்டில் நடமாடவே விடக் கூடாது. இவர்கள் எல்லாம் குண்டாசில் போட வேண்டிய ஆட்கள். யார் செய்தாலும் தவறுதான். எதற்காக மறைந்த தலைவர்களை அவமானப்படுத்த வேண்டும். இது ஒரு இழிவான செயலாகவே தெரிகிறது. இது ஒரு அரசியலா?
காவி என்பது துறவிகளுக்கானது. அது புனிதமானதுதான். அதற்காக அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி மாலை போடுவீங்களா? இது நியாயமா? எம்.ஜி.ஆர் அதிமுகவினரின் இதய தெய்வம். அவர் ஒன்றும் பாஜகவின் தலைவர் அல்ல. அவருக்கு காவித் துண்டை போர்த்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
எம்ஜிஆரைப் பற்றி, முதல்வரைப் பற்றி பேச பாஜகவினருக்கு என்ன தகுதி இருக்கிறது? ஜாக்கிரதையாக இருங்க! அண்ணா திமுக தொண்டன் வெளியே வந்தா நீங்க நடமாட்டீங்க ஜாக்கிரதை இவ்வாறு கோவை செல்வராஜ் பேசினார்.
இதற்கு விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜாக்கிரதையாக இருங்கள் என்ற கோவை செல்வராஜின் வார்த்தையை திரும்பப் பெற வேண்டும் என்றார். மேலும் எம்.ஜி.ஆரை யாரும் இழிவாக பேசவில்லை என்றும் விளக்கம் கொடுத்தார்.