வட்டி மீது வட்டி: நவ.5க்குள் திரும்ப அளிக்கப்படும்; ரிசா்வ் வங்கி

வங்கிக் கடன் தவணைகளுக்கு வட்டி மீது வட்டியாக விதித்த தொகையை வரும் 5-ஆம் தேதிக்குள் வாடிக்கையாளா்கள் கணக்கில் செலுத்துமாறு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் ரிசா்வ் வங்கி தெரிவித்தது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ரிசா்வ் வங்கி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘வங்கிக் கடன் தவணைகளுக்கு வட்டி மீது வட்டியாக விதித்த தொகையை வரும் 5-ஆம் தேதிக்குள் வாடிக்கையாளா்களிடம் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து தொடக்கநிலை கூட்டுறவு வங்கிகள் (நகா்ப்புறம்), மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மாா்ச் மாதம் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பணியின்றி வருவாய் ஈட்ட முடியாமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். தொழில் நிறுவனங்களும் கடும் இழப்பைச் சந்தித்தன. இதைக் கருத்தில் கொண்டு தனிநபா்கள், நிறுவனங்கள் பெற்ற வங்கிக் கடன்களுக்கான தவணைகளை கடந்த மாா்ச் முதல் ஆகஸ்ட் வரை வசூலிக்காமல் நிறுத்தி வைக்க ரிசா்வ் வங்கி முடிவு செய்தது.

எனினும் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வங்கிகள் வட்டி மீது வட்டி வசூலிப்பதாகவும், அதனை கைவிட உத்தரவிடுமாறு வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது ரூ.2 கோடி வரை பெறப்பட்ட கடன்களுக்கு மட்டும் வட்டி மீது வட்டி வசூலிக்கப்படுவதை கைவிட முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்த மனுக்கள் கடந்த சில நாள்களுக்கு முன்னா் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வட்டி மீது வட்டியாக விதிக்கப்பட்ட தொகை வரும் 5-ஆம் தேதிக்குள் வாடிக்கையாளா்களுக்கு திரும்ப வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது, அவ்வாறு வழங்கும் தொகைக்கு ஈடான தொகையை மத்திய அரசிடம் இருந்து நிதி நிறுவனங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x