பிரான்சில் தொடரும் தாக்குதல்கள்: பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

பிரான்ஸ் நாட்டில் அரங்கேறி வரும் தொடர் தாக்குதல்களை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உத்தரவிட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையில் வெளிவந்த மதக்கடவுளின் கேலிச்சித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அந்நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி சாமுவேல் என்ற ஆசிரியர் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் தீவிரம் அடங்குவதற்குள் வியாழக்கிழமை பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் நோட்ரி டேமி என்ற கிறிஸ்துவ தேவாலயத்திற்குள் கத்தியுடன் நுழைந்த மர்மநபர் அங்கிருந்தவர்கள் மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
தகவலடைந்து விரைந்த காவல்துறையினர் தேவாலயத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மர்மநபரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
இதற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தொடரும் தாக்குதல்களில் இருந்து மக்களைக் காக்க நாடு முழுவதும் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உத்தரவிட்டுள்ளார்