“நான் கீழே தள்ளி விடப்பட்டது பெரிய விஷயமே அல்ல. ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அடித்து தள்ளப்பட்டுள்ளோம்!” ராகுல்காந்தி பேட்டி!

“ஒட்டுமொத்த நாட்டையும், மக்களையும் அடித்து வீசுகின்றனர். இதில், என்னை கீழே தள்ளியது ஒரு பெரிய விஷயமல்ல” என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
உ.பி.,யின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதில் டில்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த வாரம் அந்த பெண்ணின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் எம்.பி., ராகுல் சென்றார். ஆனால், அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து, அவர் நடந்து செல்ல முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்திய போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல் கீழே தள்ளிவிடப்பட்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக பஞ்சாபில் நிருபர்களிடம் ராகுல் அளித்த பேட்டியில், “ஒட்டுமொத்த நாடும், மக்களும் அடித்து கீழே தள்ளிவிடப்படுகின்றனர். அதில், நான் கீழே தள்ளிவிடப்பட்டது பெரிய விஷயமல்ல. நாட்டை காப்பது நமது கடமை. விவசாயிகளுக்கு நாம் துணை நிற்க வேண்டும். நாம் அரசுக்கு எதிராக போராடினால், கீழே தள்ளிவிடப்படுவோம். தடி கொண்டு தாக்கப்படுவோம். அதுதான் இந்த அரசு.
உண்மையாக கீழே தள்ளிவிடப்பட்டது யாரென்றால், இளம்பெண்ணின் குடும்பத்தினர் தான். பெண் குழந்தை வைத்துள்ளவர்கள் இதனை உணர்ந்திருப்பார்கள். உங்களுக்கு பெண் குழந்தைகள் இல்லையென்றாலும், ஹத்ராஸ் விவகாரத்தில், கொலைக்கான நோக்கத்தை புரிந்து கொள்ளலாம். அவர்கள் இந்த போராட்டத்தில் தனித்து விடப்படவில்லை என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தவே விரும்பினேன். தினமும் ஏதோ விதங்களில் ஆண்களால் வன்கொடுமைகளை அனுபவிக்கும் லட்சகணக்கான பெண்கள் பக்கம் நான் உறுதுணையாக நிற்பேன் என்பதை தெரிவிக்க விரும்பினேன்.” இவ்வாறு அவர் கூறினார்.