வெளிநாடு சுற்றி வந்தீர்களே…வேலைவாய்ப்பு எங்கே ஸ்டாலின் கேள்வி

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாடு சுற்றுலா சென்று வந்தீர்களே, புரிந்துணர்வு ஒப்பந்தம் என்னானது, வேலைவாய்ப்பின் நிலை என்ன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என முதல்வரிடம் கேட்டுள்ளார்.
அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையுடன், மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் இணைந்து நடத்திய ஆய்வை சுட்டிக்காட்டி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அரசின் ஆய்விலேயே மார்ச் முதல் மே வரையிலான 3 மாதங்களில் தமிழ்நாட்டில் 53% வீடுகளில் தலா ஒருவர் வேலையிழந்திருப்பதாகவும், அமைப்புசாரா தொழிலாளர்களில் 83.4% பேர் வேலையிழந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் 56% நகர்புறங்களில் 50% குடும்பங்களில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 92%, நகர்ப்புறங்களில் 95% வீடுகளைச் சேர்ந்தவர்கள் வருமானம் இழந்துள்ளனர். திமுக சொன்ன போது கேட்காத முதல்வர், அரசின் ஆயுவு தகவல்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடு சுற்றுலா மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஒழுங்குமுறையில்லாமல் ஊரடங்கை நீட்டித்து, டாஸ்மாக்கை திறந்து, பிழைப்பு தேடிச் செல்வோரை தடுத்து, இ-பாஸ் மூலமாக மக்களை முடக்கிவிட்டது அதிமுக அரசு. இவ்வாறு காட்டமாக கூறியுள்ளார்.