தமிழகத்தில் கட்டணம்! கேரளத்தில் கரிசனம்; – தாயகம் திரும்புவோரின் குமுறல்

பல வேதனைகளுடன், 100 ரூபாய் கூட இல்லாமல், வெளிநாட்டிலிருந்து வந்திறங்கும் தமிழர்களிடமிருந்து, கட்டண கொள்ளை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

கொரோனா ஊரடங்கால், லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பளித்த வளைகுடா நாடுகள் முடங்கியிருக்கின்றன. தமிழகத்திலிருந்து அங்கு சென்று பணிபுரிவோர், கடந்த மூன்று மாதங்களாகவே அங்கு பணி இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வேலைசெய்யும் நிறுவனங்களே விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருகின்றன.

கேரளத்தின் எர்ணாகுளம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கும் தமிழர்களை, தமிழக எல்லைப்பகுதியான களியக்காவிளை வரை, இலவசமாக வாகனங்களில் அழைத்துக் கொண்டுவந்து, கேரள அரசு இறக்கி விடுகிறது. ஆனால், இவ்வாறு தமிழக எல்லைக்குள் வந்தபிறகு, எதற்கு எடுத்தாலும் கட்டணம் பிடுங்கும் சூழல், மிகுந்த மனவேதனை அளிப்பதாக குமுறுகின்றனர் தாயகம் திரும்பும் தொழிலாளர்கள்.அண்மையில் அரபுநாட்டில் இருந்து திரும்பிய கணேஷ் இதுகுறித்து கூறியதாவது:

“ கேரள அரசு தமிழக எல்லை வரை இலவசமாகவே அழைத்துவரும் நிலையில், தமிழக சொந்த மாவட்டத்திலேயே 60 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து அழைத்துச் செல்கின்றனர். வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு 60 ரூபாய்கூட இல்லையா எனப் பலர் நினைப்பார்கள். நாங்கள் இதற்கு முன்பு வந்த சூழல் வேறு. இப்போது வந்திருக்கும் சூழல் வேறு. நான் சாதாரண எலக்ட்ரீசியன் வேலைக்குத்தான் சென்றேன். மூன்று மாதங்களாக வேலை இல்லை. என்னைப் பணிக்கு அமர்த்திய கம்பெனி மூன்று மாதமும் சாப்பாடு மட்டும் போட்டார்கள். கிளம்புவதற்கு விமான டிக்கெட் போட்டுக் கொடுத்து நம் ஊர்ப் பணத்துக்கு 150 ரூபாயும் தந்தார்கள்.

விமானம் தாமதமாக வந்ததால் ஒரு ஆப்பிளும் பர்கரும் விமான நிறுவனம் தந்தது. அதைச் சாப்பிட்டுவிட்டு கேரள அரசின் புண்ணியத்தால் கட்டணமில்லாப் பயணத்தில் தமிழக எல்லை வரை வந்துவிட்டேன். இங்கே எந்த வசதியும் இல்லை. தண்ணீர் பாட்டில் 20 ரூபாய். எதிரிலே சப்பாத்தி போடுகிறார்கள். அதைப் பணம் கொடுத்து வாங்க வேண்டும். தண்ணீரோ சப்பாத்தியோ சாப்பிட்டுவிட்டால் பேருந்தில் 60 ரூபாய் டிக்கெட் எடுத்து கரோனா பரிசோதனை செய்யும் இடத்துக்குப் போக முடியாது. வெளிநாட்டு வாழ்க்கை என்றுதான் மதிப்பிடுகிறார்களே தவிர அங்கு என்ன பணி செய்தோம் இப்போது எவ்வளவு சிரமங்களுக்கு இடையே இங்கு திரும்புகிறோம் என்பதெல்லாம் இங்கிருப்பவர்களுக்குத் தெரிவதில்லை”

இவ்வாறு கணேஷ் ஆதங்கப்பட்டார்.

இதேபோல் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் நபர்கள் சேர்ந்த பின்புதான் பேருந்து வசதி அமைத்துக் கொடுக்கப்படுவதால் உடனுக்குடன் செல்ல முடியாமல் பசியோடும் பலர் முகாமில் இருக்கின்றனர். அரசு இவ்விஷயத்தைக் கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தன் மனைவி மக்கள் குடும்பம் உறவுகள் இறுதியாக தன் சொந்த நாடு இவ்வனைத்தையும் விடுத்து பிழைப்புக்காக வேரு மண்ணிற்கு சென்று அங்கு அடிமை வாழ்க்கை வாழும் நம் மக்களையும் , அவர்களுடைய உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்பதே தமிழக அரசிற்கு வேண்டுகோள்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x