பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது வேட்பாளர்களா? குற்றவாளிகளா..? அதிர்ச்சி அறிக்கை!!

பீகாரில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1463 வேட்பாளர்களில் 502 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகளின் பின்னனி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 94 சட்டமன்ற தொகுதிகளில் 1463 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 502 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது. அதிலும் 389 பேர் மீது கொடூர குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் தேர்தலுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் வழங்கிய பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
உச்சநீதிமன்ற கோரிக்கை புறக்கணிப்பு
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிகம் பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களாக கருதப்படுகின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் உச்சநீதிமன்றம், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு தேர்தலில் அதிக வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும், குற்ற வழக்குகளில் தொடர்பில்லாதவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருந்தது. அத்துடன் குற்ற வழக்கின் பின்னணி இல்லாதவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கட்சிகளுக்கு கோரிக்கை ஒன்றினை வைத்து இருந்தது.
இந்நிலையில் பீகாரின் இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் 47% – 64% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. அங்குள்ள கட்சிகளே குற்றவாளிகளுக்கு தான் தேர்தலில் போட்டியிட முதல் வாய்ப்பினை வழங்குகிறது.
இது குறித்து மேற்கொண்ட ஆய்வில், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியில் அதிகபட்சமாக 64% வேட்பாளர்களும், பாஜகவில் 63% வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சியில் 58% வேட்பாளர்களும், லோக் ஜனசக்தி கட்சியில் 54% வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் கட்சியில் 49% வேட்பாளர்களும் மற்றும் ஜனதா தள கூட்டணியில் 47% வேட்பாளர்களும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாக போட்டியிடுகின்றனர்.
கொடூர குற்ற வழக்குடைய வேட்பாளர்கள்
அதிலும் அதிகபட்சமாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சி கொடூர குற்ற வழக்குகளில் தொடர்புடைய வேட்பாளர்களுக்கு (50 சதவீதம்) வாய்ப்பளித்துள்ளது. அதனை தொடர்ந்து லோக் ஜனசக்தி கட்சி 46 சதவீதமும், பாரதிய ஜனதா கட்சி 44 சதவீதமும், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் 42 சதவீதமும், ஜனதா தள கூட்டணி 35 சதவீதமும் கொடூர குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளன.
இந்திய தண்டனை சட்டத்தில் கொடூர குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்சமாக ஜாமீனில் வெளியே வர முடியாதபடி 5 வருட தண்டனை வழங்கப்படுகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவை கொடூர தண்டனைகளாக பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான வேட்பாளர்கள்
இந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 49 வேட்பாளர்கள் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாக அறியப்படுகின்றனர். அதிலும் 4 வேட்பாளர்கள் மீது கற்பழிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் 32 வேட்பாளர்கள் கொலை வழக்கிலும், 143 வேட்பாளர்கள் கொலை முயற்சி வழக்கிலும் தொடர்புடையவர்களாக அறிப்படுகின்றனர்.
ரெட் அலர்ட் தொகுதி
இத்தேர்தலில் 84 தொகுதிகள் ‘ரெட் அலர்ட்’ தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டிருந்தால் ‘ரெட் அலர்ட்’ தொகுதியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.