“மோடி ஆட்சியில் இந்தியா ஒரு சர்வதிகார நாடு..!” ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமடைந்து வருவதாக சுவீடன் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
வி-டேம் (V-Dem) இன்ஸ்டியூட் அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் 165 நாடுகளில் 665 வல்லுநர்களை கொண்டு ஆய்வு நடத்தினர். கருத்து மற்றும் ஊடக சுதந்திரம், சமுதாய நிலை, கல்வி சுதந்திரம், தேர்தல் நடைமுறை உள்ளிட்டவை முக்கிய குறியீடாக எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன் அடிப்படியில் நேற்று வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில், “உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஜனநாயகம் பலவீனம் அடைந்துள்ளதாகவும், ஜனநாயக குறியீட்டில் 90-வது இடத்தில் இந்தியா உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் சிவில் சமூகம் மற்றும் ஊடக சுதந்திரம் குறைந்து விட்டதாகவும், எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு மதிப்பு இல்லாதது, எதிர்ப்பின் இடம் குறைந்து வருவதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியா ஜனநாயக நாடு என்ற தகுதியை இழக்கும் ஆபத்தில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
டென்மார்க் முதல் இடத்திலும், இலங்கை 70-வது இடத்திலும், நேபாளம் 72-வது இடத்திலும் பாகிஸ்தான் 126-வது இடத்திலும், வங்க தேசம் 154-வது இடத்திலும் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து V-Dem இன்ஸ்டியூட் இயக்குனர் கூறுகையில், “இந்தியாவில் மோடி ஆட்சிக்கு 2 ஆண்டுகளில் அந்நாட்டின் ஜனநாயக குறியீடு குறைய தொடங்கினாலும், தற்போது அது மேலும் மோசமடைந்து, ஜனநாயகம் பற்றி துளியும் கவலை படாத, சர்வாதிகார நாடுகளின் பட்டியலுக்கு மிகவும் நெருக்கமாக சென்றுவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.