70 கி.மீ., சைக்கிளில் வந்த முதியவர்; முகத்தை திருப்பிக்கொண்ட அதிகாரிகள்

கும்பகோணம் அருகே சைக்கிளில் 70 கிலோ மீட்டர் பயணித்து வந்து மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வேண்டும் எனக்கோரிய முதியவரின் கோரிக்கை நிகாரிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் பகுதி ஏனாநல்லூரைச் சேர்ந்தவர் நடேசன் (73). இவர் மாற்றுத் திறனாளி. சைக்கிள் மூலம் தெருத்தெருவாக சென்று கோலமாவு விற்பனை செய்து வருகிறார். பொதுமுடக்கத்தால் இவரது வியாபாரம் முற்றிலும் முடங்கியது. வருவாய் இல்லாததால் மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகையை பெறுவதற்காக முடிவு செய்த இவர், அதற்கான அடையாள அட்டையை பெற ஆட்சியர் அலுவலகம் செல்ல முயன்றார். பொதுமுடக்கத்தால் பேருந்தோ, ரயிலோ இல்லாத காரணத்தினால் சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மூலம் பயணித்து ஆட்சிய அலுவலகம் சென்றார்.

அதிகாலை 3 மணிக்கு கிளம்பிய அவர், காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்துள்ளார். ஆனால் அவருக்கு அங்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டை கிடைக்கவில்லை. ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டதுபோல இந்த முறையும் நிகாரித்துள்ளனர். அத்துடன் எலும்பு முறிவு மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கி வருமாறு கூறியிருக்கின்றனர். 73 வயது முதுமையில் சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவிற்கு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனுடன் சைக்கிளை ஓட்டி வந்த அவர், மீண்டும் மருத்துவரிடம் செல்லுமாறு அதிகாரிகள் கூறியதால் நொந்து போனார்.

முதியவர் நடேசன் கூறும்போது, “எனது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது மகனுடன் வசித்து வருகிறேன். ஊரடங்கில் வேலை இல்லாத தனக்கு உதவி தொகை பெற, மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டைப் பெறுவதற்காக கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மனு அளித்தேன். அதற்கு பதில் கிடைக்கவில்லை. எனவே ஆட்சியரகத்தில் மனு கொடுப்பதற்காக சைக்கிளில் வந்தேன். பேருந்து இல்லாததால் சைக்கிளில் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. மனுவை பெற்ற அலுவலர் எலும்பு முறிவு மருத்துவரிடம் சான்று பெற்று வருமாறு கூறினார். எனவே மீண்டும் சைக்கிளிலேயே ஊருக்குச் செல்கிறேன்” என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x