மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவிக்கு 40 ஆண்டுகளுக்கு பின் உலக சாதனையாளர் விருது!

மனித கம்ப்யூட்டர் என கணித மேதைகளால் புகழப்பட்ட சகுந்தலா தேவிக்கு, அவர் விடுவித்த கணித புதிர் ஒன்றிற்காக 40 ஆண்டுகளுக்கு பிறகு விருது வழங்கி கவுரவித்துள்ளது கின்னஸ் அமைப்பு.
மிக சிக்கலான கணிதங்களுக்கும், மின்னல் வேகத்தில் விடை சொல்லி உலக கணித மேதைகளை புருவம் உயர்த்த வைத்தவர் சகுந்தலா தேவி. ‘பசில் டூ பசில் யூ’, ‘பிகரிங் த ஜாய் ஆப் நம்பர்ஸ்’ போன்ற பிரபலமான கணித நூல்களை எழுதியவர்.
40 ஆண்டுகளுக்கு முன் லண்டன் இம்பீரியல் கல்லூரியின், கம்ப்யூட்டர் துறையைச் சேர்ந்தவர்கள், சிக்கலான, 13 இலக்க எண்களை கொடுத்து அந்த புதிரை விடுவிக்கும் படி கூறினர். இந்த சிக்கலான கணக்கிற்கு, 28 வினாடிகளில் விடையளித்து, ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
பெங்களூருவில் வசித்து வந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது 84 வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் அவர் விடுவித்த புதிருக்கு 40 ஆண்டுகளுக்கு பின்னர் அதி வேக மனித கணக்கீடு என்று கின்னஸ் உலக சாதனையாளர் விருது சகுந்தலா தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் சகுந்தலாதேவியின் மகள் அனுபமா பானர்ஜி விருதை பெற்றுக்கொண்டார்.
சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு அவர் பெயரிலேயே பாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டுள்ளது தற்போது அமேசான் பிரைமில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதில் சகுந்தலா தேவியாக பிரபல நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார்.