நீங்கா வடுக்களை தந்த டெல்லி கலவரத்தால் தங்கள் சொத்துகளை விற்று இடம் பெயரும் அப்பாவி மக்கள்!!

டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நடந்து ஏழு மாதங்கள் ஆகியும் அங்கு அந்த மக்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகள் நின்றபாடில்லை. இன்றுவரை அங்கு வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்கள் தாக்கப்படுவதும், அவர்களின் வீடுகள், கடைகள் உடைக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
ஒரு மாதத்திற்கு முன்பாக 14 வயது சிறுமி பிஷாவின் குடும்பத்தினர் ஷிவ் விகாரிலுள்ள தங்களது வீட்டை விற்று விட்டு பாதுகாப்பான இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். கலவரத்தினால் ஏற்பட்டுள்ள பயத்தினால் குறைவான விலைக்கு போனாலும் பரவாயில்லை என்று விற்று வேறொரு இடத்திற்கு மாறியுள்ளனர். 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட அந்த வீடு, கலவரத்தினால் வெறும் 12 லட்சத்திற்கே விற்பனையாகியுள்ளது.
சிறுமி பிஷாவின் அம்மா இதுகுறித்து கூறுகையில், “இங்கிருக்கும் இந்துக்கள் எங்களை நிம்மதியாக வாழ விடுவதில்லை. அவர்களை தெருவில் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். எங்களை கொரோனா வைரஸ் என்றும், கலகக்காரர்கள் என்றும், பிரியாணி சாப்பிடுவதால் நாங்கள் உண்மையற்றவர்கள் என்றும் கூறுகிறார்கள்” என்று வருத்தத்துடன் கூறினார்.
பிஷா இந்த இடத்திலேயே வளர்ந்த சிறுமி. அவளால் பழக்கப்படாத புதிய இடத்திற்கு மாறியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதற்கு முதல் காரணம் அவள் சொந்த வீட்டை விட்டு பிரிந்தது. அதை விட முக்கிய காரணம் அதுவரை ஒன்றாக பழகிய அவளது நண்பர்கள், அந்த இடத்தை விட்டு பிரியும்போது ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை என்பதே. “எங்களை யார் என்றே தெரியாதென்றால் எனக்கு எதுவும் வலித்திருக்காது. ஆனால் அதே தெருவில் ஹோலியையும், பக்ரீத்தையும் ஒன்றாக கொண்டாடி இருக்கிறோம். நாங்கள் படிக்கும்போதும், விளையாடும்போதும் ஒன்றாகவே இருந்திருக்கிறோம். எப்படி அவர்களால் மறக்க முடிந்தது? நாங்கள் வீட்டை விட்டு கிளம்பும்போது ஏன் செல்கிறீர்கள் என்று கேட்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அவர்கள் வீட்டின் கதவை ஓங்கி மூடிக்கொண்டது இன்னும் வேதனையாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.
பிசாவின் மூத்த சகோதரி நஸ்ரின் குறிப்பிடுகையில், “அந்த கலவரம் நடைபெறும் வரும் வரை நாங்கள் அங்கு மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தோம். ஆனால் அந்த கலவரத்திற்கு பிறகு இந்த வருட ஹோலிக்கு வாழ்த்து கூறக் கூட எங்கள் நா எழவில்லை. எங்கே அதற்காக நாங்கள் தாக்கப்படுவோமோ என்ற பயம் இருந்தது. ஆனால் இன்னும் எங்கள் எங்கள் கன்னங்கள் அவர்கள் பூசும் ஹோலி பொடிக்காக காத்து கொண்டு இருக்கிறது. அவர்களது தட்டுகளும் எங்கள் பக்ரீத் இனிப்புக்காக காத்து கொண்டுள்ளது என்பதை அறிவேன்” என்று கூறியுள்ளார்.

பிசாவின் குடும்பத்தை போலவே இர்பானின் குடும்பமும் இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டின் ஒரு பகுதியில் நடத்தி வந்த கடை முழுவதுமாக சூறையாடப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இருந்த வீட்டை சுமார் 4 லட்சம் நஷ்டத்திற்கு விற்றுவிட்டு ஷிவ் விகாரிலிருந்து வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்துள்ளனர்.
இதுகுறித்து இர்பான் கூறுகையில், “இந்த கலவரத்தினை நேரில் கண்ட எங்கள் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரக் கூட பயப்படுகின்றனர். எங்கள் கடை மற்றும் வீடு மற்றும் சூறையாடப்பட்டதால் ஏற்பட்ட நிதி நெருக்கடியாலும், குழந்தைகளின் பாதுகாப்பு காரணமாகவும் ஷிவ் விகாரிலிருந்த வீட்டை நஷ்டத்திற்கு விற்றுவிட்டு வந்துவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
இது வெறும் பிஷா மற்றும் இர்பானுக்கு நேர்ந்த அனுபவங்கள் மட்டுமல்ல, இதுபோல் அங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் சொந்த வீட்டை சந்தை விலைக்கு குறைவாக விற்று விட்டு அறிமுகமே இல்லாத வேறு ஒரு இடத்திற்கு குடிப்பெயர்ந்துள்ளனர்.

ஆனால் இன்னும் ஷிவ் விகாரில் இந்த கொடூர நிகழ்வுகளை எல்லாம் தாங்கி கொண்டு வாழும் முஸ்லிம் மக்களுக்கு தொடர்ந்து கொடுமைகள் அங்கு வாழும் பெரும்பான்மை இந்துக்களால் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஒவ்வொரு தெருவுக்கும் கதவு அமைத்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் தெருவில் சுதந்திரமாக நடக்க முடியாமல் செய்துள்ளனர். மேலும் முஸ்லிம்கள் தொழும் நேரத்தில் ‘ஜெய் ஸ்ரீ ராம்” என்று கத்தி கொண்டு செல்வதும், சில முஸ்லிம்கள் அவ்வாறு சொல்ல கட்டாயப்படுத்தப்படும் கொடுமையும் நடந்து வருகிறது.
ஆனால் இவ்வளவு இன்னல்களுக்கு இடையேயும் சில முஸ்லிம்கள், “நாம் ஏன் ஷிவ் விகாரிலிருந்து செல்ல வேண்டும்? நாம் என்ன செய்தோம்? இங்கு தான் நாம் வாழ வேண்டும்” என்பது அந்த இடத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பையும், அவர்களின் வலி நிறைந்த வடுக்களையும் காட்டி நம்மை உலுக்கி செல்கிறது.