கல்லூரிக்கு வர ஆர்வம் காட்டாத மாணவர்கள்: வெறிச்சோடும் வகுப்பறைகள்

கல்லூரி வருகை பதிவு கட்டாயமில்லாததால், வகுப்புகளுக்கு வரும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், பல கல்லூரிகளில் வகுப்புகளே நடக்காமல் மூடும் நிலைக்கு திரும்புகிறது.
தமிழகத்தில் கடந்த, 2 ம் தேதி முதல் முது நிலை படிப்பு இறுதியாண்டு மாணவ, மாணவியருக்கும், 7ம் தேதி முதல், இளநிலை இறுதியாண்டு மாணவ, மாணவியருக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதில் ஒவ்வொரு வகுப்பும் இரண்டு பிரிவாக பிரித்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்பு அட்டவணை தயாரிக்கப்பட்டு, கல்லூரிகள் செயல்பட தொடங்கின. வருகை பதிவு கட்டாயமில்லாததால், வகுப்பில் பாதிக்கும் குறைவான மாணவ, மாணவியரே பங்கேற்றனர்.
மிகச்சில மாணவர்களே வருவதால், வழக்கமான வகுப்புகளை போல், கற்பித்தல் நடைபெறவில்லை. இதனால், கல்லூரி திறந்த உடன் வந்த மாணவர்களின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. பல கல்லூரிகளில் மாணவர் வருகை சுத்தமாக நின்றுவிட்டது. இதனால், மீண்டும் கல்லூரிகள் மூடும் நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து கல்லூரி ஆசிரியர்கள் கூறியதாவது, “முழுமையாக அனைத்து மாணவர்களும், கட்டாயம் வர வேண்டும் என்றால் மட்டுமே, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும். தற்போது விருப்பத்தின் பேரில் என்பதால், ஓரிருவர் மட்டுமே வருகின்றனர். அவர்களுக்கு பாடம் நடத்தினாலும், மீண்டும் அனைவருக்கும் நடத்த வேண்டியிருக்கும் என்பதால், அவற்றை பல ஆசிரியர்கள் தவிர்க்கின்றனர். மேலும் போதிய பஸ் வசதியும் இயக்கப்படுவதில்லை. கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல், வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டால் மட்டுமே, வழக்கமான கல்லூரி வகுப்புகள் நடைபெறும்” என்றனர்
இது குறித்து சேலம் சக்தி கைலாஷ் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராஜவிநாயகம் கூறியதாவது, “கல்லூரிகளை பொறுத்தவரை, படிப்பையும், ஒழுக்கத்தையும் வழங்குவதில் உறுதி கூற முடியும். ஆனால், நோய் பாதிப்பில் அந்த உறுதியை கொடுக்க முடியாது. முழு சுகாதாரமாக வைத்திருப்பினும், தொற்று பரவும் சூழல் பல இடங்களில் உருவாகியுள்ளது. நோய் தொற்றுக்கு பொறுப்பேற்று, கல்லூரி நடத்துவது கடினம். ஆன்லைன் வகுப்புகள் செல்லும் சூழ்நிலையில், யாரும் கல்லூரிக்கு வரவும் விரும்புவதில்லை. தடுப்பூசி அமலுக்கு வந்து, நோய் தொற்று குறித்த பாதுகாப்பான சூழல் ஏற்படும் வரை, வழக்கமான கல்லூரி செயல்பாடுகள், கேள்விக்குறிதான்” என்றார்.