ஹத்ராஸ் சம்பவத்தில் உள்நுழைந்து சதி செய்த கறுப்பு ஆடு!!!

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு இந்துத்துவா ஆதரவாளர் மதச்சார்பற்ற இந்துக்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் வெறுக்கத்தக்க பேஸ்புக் வீடியோ ஒன்றினை பதிவு செய்து, அதில் அவர்களை ‘தேச துரோகிகள்’ என்று குறிப்பிடிருந்தார். அந்த வீடியோவும் அதிக பேரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டது.

இந்த வீடியோவிற்கு பின்னால் இருந்தவன் தீபக் சர்மா. ஹத்ராஸில் படுகொலை சம்பவத்தால் நாடே பற்றி எரியும் போது, ஊடங்களின், மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஆளும் பாஜக அரசால் பயன்படுத்தப்பட்ட பேராயுதம். ஹத்ராஸ் சம்பவம் மட்டுமல்ல, இதற்கு முன்னே நடந்த எண்ணற்ற மத கலவரங்களுக்கு எண்ணெய் ஊற்றியவன். அவனைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

இணையத்தில் வெறுப்புணர்வை தூண்டுவதில் கை தேர்ந்த தீபக் சர்மா கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு சம்பவங்களை நிகழ்த்தினான். ஒன்று டாடா நிறுவனத்தின் ஒருபகுதியான ‘தனிஷ்க்’ நகைக்கடை விளம்பரத்திற்கு எதிராக #Tanishiq_Mafi_Maang என்ற ஹேஸ்டேகை பயன்படுத்தி மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டியதோடு, அந்த விளம்பரத்தை நீக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் நாடு முழுவதும் தனிஷ்க் நகைக்கடை முன்பு பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தான்.

இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கேட்டபோது அது குறித்து பதில் ஏதும் தெரிவிக்காமல் நழுவினார். இரண்டாவது மதராசாக்களுக்கு எதிராக #Terrorism_in_Madarasa என்ற ஹேஸ்டேகை பயன்படுத்தியது. இணையத்தில் மட்டுமல்ல சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் விதமாக நேரிடையாகவும் செயல்பட்டு உள்ளான்.

அதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஹத்ராஸ் படுகொலை. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஹத்ராசில் ஒரு 19 வயதான தலித் பெண் ஆதிக்க சாதியினரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த பெண்ணின் இறந்த உடலை பெற்றோர் அனுமதியின்றி, அவர்களை பார்க்க கூட விடாமல் தீயிட்டு எரித்து உத்திரபிரதேச காவல்துறை அழித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது உத்திரபிரதேசத்தை ஆட்சி செய்யும் யோகி தலைமையிலான பாஜக அரசிற்கு எதிராக பெரும் கண்டன குரலை எழச் செய்தது.

ஆனால் அந்த நேரத்தில் யோகி அரசிற்கு ஆதரவாக உள்நுழைந்த தீபக் சர்மா, ஆதிக்க சாதியினரான குற்றவாளிகளுக்கு ஆதரவாய் நின்றதோடு, இந்த பாலியல் வன்புணர்வு கொலையையும் வேறு கோணத்தில் திருப்பி விட்டு அதனைப் பற்றி பொய்யான பிம்பத்தை ஏற்பத்தினான். அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பமே அந்த பெண்ணை ஆணவ கொலை செய்தது என்று ஒரு கதையை உருவாக்கி பரவச் செய்தான். அதுமட்டுமல்லாமல் ஹத்ராஸ் சம்பவத்தை பயன்படுத்தி மத கலவரத்தை ஏற்படுத்தவும் முயற்சி செய்தான். இதனை உத்திரபிரதேச மாநில உளவுத்துறையே கண்டுபிடித்து எச்சரித்துள்ளது.

ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சி தலைவர்களை தனது பாஜக கட்சி ஆதரவாளர்களோடு தடுத்ததோடு, அவர்களை மிரட்டி, அவமரியாதையும் செய்துள்ளான். அப்படி சந்திக்க சென்ற ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் மீது மை தெளித்து அவரை திரும்பி போக கோஷமிட்டதை தொடர்ந்து போலீஸ் அவனை கைது செய்தது. ஆனால் மறுநாளே விடுதலை செய்யப்பட்டான்.

சில நாட்கள் கழித்து ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் செய்தி சேகரிக்க சென்ற மூன்று முஸ்லிம் செய்தியாளர்கள் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஏற்றி சென்ற ஓட்டுநரும் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்யப்பட்டார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தீபக் சர்மா. ஹத்ராசில் கைது செய்யப்பட்ட முஸ்லீம் செய்தியாளர்கள் மூலம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(PFI) கலவரத்தை உருவாக்குவதற்காகவே முயற்சி செய்வதாக பொய்யான பிம்பத்தை ஊடகங்களிடையே ஏற்படுத்தினான்.

ஹத்ராஸ் சம்பவத்திற்கு முன்னர் கல்லூரிகளில் மாணவர்களிடையே பாஜக அரசின் சுயலாபத்திற்காக கலவரத்தை ஏற்படுத்தி சுகம் காண்பதிலும் தீபக் சர்மா கெட்டிக்காரனாய் இருந்துள்ளான். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞனே, தான் தீபக் சர்மாவின் தீவிர ஆதரவாளன் என்று கூறியுள்ளான். கடந்த 2018 ஆம் ஆண்டு சார்தா பல்கலைகழகத்தில் இந்திய மற்றும் ஆப்கன் மாணவர்களிடையே வன்முறையை தூண்டிவிட்டதால் அப்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.

மேலும் கடந்த வருடம் பேஸ்புக்கில் “மீண்டும் ஒரு கோத்ரா படுகொலை நடத்தப்பட வேண்டும். அவர்களின் (இஸ்லாமியர்களின்) தலை வெட்டப்பட்ட வேண்டும்” என்று வன்முறையை தூண்டும் விதமாக கருத்து பதிவிட்டதால் அவனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் வங்காளத்தை சேர்ந்த முஸ்லீமை படுகொலை செய்த சம்புலால் ரீகருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தவனும் இவனே. சம்புலாலை ‘நவீன சிவனின் அவதாரம்’ என்றும், இது போன்று இந்துத்துவாவை அழிக்க நினைப்பவர்களை கொல்பவர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும் என்று கூறியுள்ளான். அதோடு சம்புலால் மீது போடப்பட்ட வழக்கின் செலவையும் அவனே ஏற்றுக்கொண்டு நிதி திரட்டியுள்ளான். ஆனால் இது வெளியே தெரிய வரவே, அப்போது ராஜஸ்தானை ஆட்சி செய்த வசுந்தர ராஜே தலைமையிலான பாஜக அரசால் வேறு வழியின்றி அந்த வங்கி கணக்கு முடக்கப்பட்டது.

பொதுவாக தீபக் சர்மா போன்றவர்கள், ஆளும் கட்சியிலிருந்து வெகு தூரத்தில் உள்ளவர்கள் போன்று பிம்பத்தை ஏற்படுத்தினாலும், இந்துத்துவா எனும் எண்ணெய் சட்டியில் நன்கு வாட்டப்பட்ட இவர்கள், ஆளும் பாஜக கட்சிக்கு பங்கம் ஏற்படும் போதெல்லாம் மக்களுடன் கலந்து பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை வேறு திசையில் திருப்பி விடுபவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் ஆரம்பித்து வைக்கவும், அந்த கட்சியின் ஐடிசெல், ‘எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல’ அதில் இன்னும் தீவிரத்தை சமூக ஊடகங்கள் வழியே கூட்டி வன்முறையை பரப்பி மக்களின், ஊடகங்களின் கவனத்தை திசை திருப்பி விடுவார்கள். இது தான் பாஜக காலங்காலமாக செய்யும் சித்தாந்த அரசியல்.

தீபக் சர்மாவை போல நாடு முழுவதும் எண்ணற்ற தீவினையர்களும், அவர்களை பின்தொடர ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள். ஒரு பிரச்சனை ஏற்படும் போது இவர்கள் செய்வது தற்செயல் போன்ற தோற்றம் ஏற்பட்டாலும், உற்று நோக்கும்போது இது தற்செயல் அல்ல “சதிசெயல்” என்று நன்கு புலப்படும். இவர்களின் நோக்கம் ஆளும் பாஜக கட்சியின் மீது விழும் களங்கத்தை திசை திருப்புவதும், அதன் வழியே பிரிவினை அரசியலை பரப்புவதுமே. இவர்களை போன்ற ‘சர்மா’க்களை அடையாளம் காண்பதும், அவர்களிடம் இருந்து விலகி இருப்பதோடு, பிரச்சனையின் தீவிரத்தை ஊற்றுநோக்கி தெளிவடைவதே நாம் அவர்களின் சூழ்ச்சியில் சிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

நன்றி – ‘THE WIRE’

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x