“மத்திய அரசை எதிர்க்க துணிவில்லாத எடப்பாடி ஆட்சியோடு அதிமுக பல அணிகளாக உடையும்!” தங்க.தமிழ்ச்செல்வன் கணிப்பு!

இந்த ஆட்சி முடியும்போது அதிமுக பல அணிகளாக உடையும் என்று திமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
தேனி மாவட்டம், ஆண்டி பட்டியில் செய்தியாளர்களிடம் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் கூறியதாவது: “தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு இருந்த ஆளுமை, துணிச்சல் தற்போது ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்தும் முதல்வர் பழனிசாமிக்கு இல்லை. மத்திய அரசை எதிர்க்கும் துணிவு இல்லாததால் நீட் தேர்வு மட்டுமின்றி, தமிழகத்துக்குத் தேவையில்லாத பல திட்டங்களையும் அனுமதித்து வருகின்றனர்.
அதிமுக ஆட்சி மீது மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மட்டுமே அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்; உரிமைகள் பாதுகாக் கப்படும். கட்சித் தலைமை அறிவுறுத்தினால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன். அதிமுகவில் கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது. இந்த ஆட்சி முடியும்போது அதிமுக பல அணிகளாக உடையும்.சசிகலா விடுதலையானால் அதிமுகவில் எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.