பண்டிகை காலத்தில் சமையல் எண்ணெயின் விலை உயர்வதற்கு மத்திய அரசு தான் காரணம்!!

மத்திய அரசின் தவறால், பண்டிகை காலத்தில் சமையல் எண்ணெயின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. இதனால், மக்களிடம் பண்டிகை கொண்டாடும் உற்சாகம்கூட குறைந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே கூறியதாவது:-
“நாட்டில் கடலை எண்ணெய், சோயா எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்று அனைத்து சமையல் எண்ணெய்களின் விலையும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம்.
இந்தியாவில் அனைவராலும் சமையலில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஏழை மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவருக்கும் இதன் தேவையில் குறைவு ஏற்படுவதில்லை. அரசாங்கம் இவ்விஷயத்தை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள், கட்டுப்படியாகக் கூடிய விலையில் கிடைப்பது அவசியம். ஏற்கனவே வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவற்றின் விலை உயர்வால் தடுமாறிக்கொண்டிருக்கும் மக்களுக்கு, சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பும் கஷ்டத்தை கொடுத்திருக்கிறது.
கொரோனா தொற்று பிரச்சினையால் வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு ஆகியவற்றை சந்தித்துவரும் ஏழை, எளிய மக்கள், சமையல் எண்ணெய் விலையும் அதிகரித்திருப்பதால் இரட்டிப்பு அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இதற்கு மத்திய அரசின் அறமற்ற, திறனற்ற செயல்பாடுதான் காரணம் என நாங்கள் கடுமையாக குற்றம்சாட்டுகிறோம்.
சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு பெரிய திட்டத்தை தொடங்கியது. ஆனால் பாரதீய ஜனதா அரசு அதை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதனால்தான் தற்போது சமையல் எண்ணெயின் விலை 33 முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
சமையல் எண்ணெயின் விண்ணைத் தொடும் விலை உயர்வால், இந்த பண்டிகை காலத்தில் பதார்த்தங்கள் அவற்றின் இனிப்பை இழந்துவிட்டன.” இவ்வாறு அவர் கூறினார்.