கொரோனாவின் இரண்டாவது அலை குறித்து மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஒடிசா முதல்வர்!!

ஒடிசாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலை வீச வாய்ப்புள்ளதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் நவீன் பட்நாயக் எச்சரித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனினும் ஒருசில மாநிலங்களில் பரிசோதனைகளை அதிகரித்து தொற்று பரவும் இடங்களைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. எனினும் தில்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அந்தவகையில் ஒடிசாவிலும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் இரண்டாவது அலை வீச வாய்ப்புள்ளதாக முதல்வர் நவீன் பட்நாயக் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, ”ஒடிசாவில் வரும் டிசம்பர் மாதம் முதல் கொரோனா பரவல் இரண்டாவது அலை வீச வாய்ப்புள்ளது. இதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ”ஊரடங்கு போன்ற சிக்கலில் அகப்படாமல் இருப்பதற்கும் இதுவே சிறந்த வழிமுறை.
கேரளம் மற்றும் தில்லி கொரோனா பரவலை சுட்டிக்காட்டி பேசிய அவர், கட்டுப்பாடுகளுடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பண்டிகை நாள்களில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறினார்.
ஓடிசாவில் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 10 முதல் 30-ஆம் தேதி வரை பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.