சீனப் பட்டாசை வைத்திருந்தாலோ, விற்றாலோ `வெடிபொருள் சட்டம் பிரிவு 9 பி’ ; 2 ஆண்டு சிறை – சிவராஜ்சிங் சௌகான்

மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், `சீன பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள் மீதும் பயன்படுத்துபவர்கள் மீதும் வெடிபொருள் சட்டத்தில் (Explosives Act) கீழ் வழக்கு தொடரப்படும். அவர்களுக்கு இரண்டாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட சட்டம் ஒழுங்கு மறு ஆய்வுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வைத்திருப்பவர்களுக்கு, விற்பனை செய்பவர்களுக்கு. இரண்டாண்டுகளை வரை சிறைத் தண்டனை வழங்கும் `வெடிபொருள் சட்டம் பிரிவு 9 பி’ இந்தாண்டு சீன பட்டாசுகளுக்கும் பொருந்தும் என்று அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர், ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்பதால், சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளிலிருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்வது சட்டவிரோதம் என்று கூறப்பட்டுள்ளது.