சரியான நேரத்தில் ஒரு துளிக்கூட மாறாமல் டிரம்பை பழிக்குப்பழி வாங்கிய கிரேட்டா!!!
ட்ரம்ப் தனது கோபத்தை எப்படி கையாள்வது என்று கற்றுக் கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் அறிவுரை கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் இழுபறி நீடித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருவதால் ட்ரம்ப் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என அவர் ட்வீட் செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் காலநிலை மாற்றம் தொடர்பாக குரல் கொடுத்து வரும் 17 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க் தற்போது டிரம்பின் ஆவேச டிவிட்டிற்கு பதிலளித்து பதிவிட்டுள்ள கருத்து அனைவராலும் பேசப்படுகிறது.
So ridiculous. Donald must work on his Anger Management problem, then go to a good old fashioned movie with a friend! Chill Donald, Chill! https://t.co/4RNVBqRYBA
— Greta Thunberg (@GretaThunberg) November 5, 2020
அதில், “இது அபத்தமானது. ட்ரம்ப் தனது கோபத்தை எப்படி கையாள்வது என கற்றுக் கொள்ள வேண்டும். அவர் தனது நண்பருடன் இணைந்து பழைய படம் ஒன்றை பார்க்க வேண்டும். பொறுமையாக இருங்கள் டொனால்ட்’ என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, “உங்களுக்கெல்லாம் எவ்வளவு தைரியம்” என ஐ.நா சபையில் கர்ஜித்த ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்கை உலகமே வியந்து பார்த்த நேரத்தில், அவரை அலட்சியப்படுத்தியதோடு, கேலியும் செய்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
கிரேட்டா ஐ.நா சபை தலைமையகத்திற்குள் நுழைய காத்திருக்கும் நேரத்தில் முந்திக்கொண்டு வேகமாக ட்ரம்ப் நுழைய, அவரை கிரேட்டா முறைத்துப் பார்க்கும் புகைப்படம் வைரலானது.
So ridiculous. Greta must work on her Anger Management problem, then go to a good old fashioned movie with a friend! Chill Greta, Chill! https://t.co/M8ZtS8okzE
— Donald J. Trump (@realDonaldTrump) December 12, 2019
இதற்கிடையில், தனக்கு கிடைக்கவேண்டிய Person Of The Year விருதையும் கிரேட்டா தட்டிப்பறித்துச் செல்ல, கடுப்பான ட்ரம்ப், இதே வார்த்தைகளை கடந்த 11 மாதங்களுக்கு முன்பு, கிரேட்டாவுக்கு எதிராக பயன்படுத்தி இருந்தார். டைம்ஸ் இதழின் 2019ம் ஆண்டுக்கான சிறந்த நபராக கிரேட்டா தன்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவர் இவ்வாறு விமர்சனம் செய்திருந்தார். தற்போது தேர்தல் பரபரப்பு சூழலில், ட்ரம்ப்பை பழிவாங்கும் வகையில் அவரது வார்த்தைகளையே அவருக்கு எதிராக கிரேட்டா பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.