“காற்று மாசு அதிகமுள்ள இடங்களில் கொரோனா இறப்பு அதிகமாகலாம்!” புதிய ஆய்வில் தகவல்!!
காற்று மாசு அதிகமுள்ள இடங்களில் கொரோனா இறப்பு அதிகமாக இருக்கலாம் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 3,000-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது. எனவே, தொற்றுநோய்களின் போது ஏற்படும் இறப்பைக் குறைப்பதற்கு காற்று மாசுபாட்டின் தீங்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
சயின்ஸ் அட்வான்ஸஸ் என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், காற்றில் மிதக்கும் மாசு நுண்துகள்கள் (பி.எம். 2.5) அதிக அளவிலான ஆபத்து காரணிகளை கொண்டவை என்றும் அதிக இறப்பு விகிதங்களுடன் தொடர்புடையது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவல் காலத்தில் மாவட்ட அளவில் இறப்புகள் அதிகம் பதிவாவதற்கும், மாசு அளவிற்கும் தொடர்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பி.எம் 2.5 ஆனது நுரையீரலில் அதிகளவிலான ஏஸ்-2 ஏற்பியை உற்பத்தி செய்யும் என்றும் இது கொரோனா வைரஸ் தொற்றை எளிதாக உடலினுள் அனுமதிக்கிறது என்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், காற்று மாசுபாடு, மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கக்கூடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதேபோன்று நுரையீரலில் ஏஸ் -2 உற்பத்தி குறைந்தால் கொரோனா வைரஸ் தொற்று நுரையீரலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது மரணத்திற்குக் கூட வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் வயது, இனம் மற்றும் புகை பிடிக்கும் நிலை போன்ற தனிப்பட்ட அளவிலான ஆபத்து காரணிகள் குறித்து முறையான தரவுகள் கிடைக்காததால் சரியாக ஆய்வு செய்ய முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, கொரோனா தொற்றுநோயுடன் தொடர்புடைய காற்று மாசு குறித்து மேலும் ஆய்வு செய்து கொரோனாவின் அபாயத்தை முழுமையாக முழுமையாக கண்டறியும் ஆராய்ச்சி அவசியம் என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.