அநீதிக்கு எதிராக போராடுபவர்களை தேசிய விரோதிகள் என்று முத்திரை குத்துவது தான் பாஜகவின் ராம ராஜ்ஜியமா? மெகபூபா முப்தி கேள்வி!!
எல்லையை ஆக்கிரமித்திருக்கும் சீனாவின் பெயரை கூட பயன்படுத்த தயங்கும் மோடி, தன் சொந்த நாட்டு மக்களை அடைத்து வைத்திருப்பதற்கு பெருமைப்படுவது ஏன்? என்று மெகபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்முகாஷ்மீரில் தனது ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மெகபூபா முப்தி, மத்திய அரசை கண்டித்து பேசினார். அவர் பேசுகையில், “மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மக்களை அடக்கி அடைத்து வைத்துள்ளது. சரியான நேரம் வரும்போது இதற்கான விளைவுகளை மத்திய அரசு நிச்சயம் எதிர்கொள்ளும். ஆனால் மத்திய அரசால் அதனை தாங்க முடியாது. மத்திய அரசு ஜம்முகாஷ்மீர் அரசியல் தலைவரகளை கண்டு அச்சப்படுகிறது. அவர்களை மக்களை சந்திக்க விடாமல் தடுக்கிறது.
உலகத்திற்கு ஜம்மு காஷ்மீர் நிம்மதியாக உள்ளதாக தவறான பிம்பத்தை காட்டுகிறது. ஆனால் உண்மையில் மக்களை வீட்டை விட்டு வெளியே கூட வர முடியாதபடி ராணுவத்தை வைத்து அடைத்து வைத்திருக்கிறது. எங்களை அமைதியான போராட்டத்திற்கு கூட அனுமதிக்க மத்திய அரசு பயப்படுகிறது.
இந்திய சட்டத்தின் ஒரு சிறப்பு ஜம்மு காஷ்மீர் உள்ளது. அதனை காப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். இந்திய எல்லைக்குள் 1000 கி.மீ கடந்து நிரந்தர கட்டிடங்களை சீனா எழுப்பியுள்ளது. அதனை எதிர்த்து உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சீனாவிடம், மத்திய அரசு எட்டாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால் உங்கள் சொந்த நாட்டு குடிமக்களாகிய காஷ்மீர் மக்களிடம் பேச தாக்கம் காட்டுவது ஏன்?
மத்திய அரசு செய்யும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ‘தேசிய விரோதிகள்’ என்று முத்திரை குத்தி அவர்களை ஒடுக்க பார்ப்பது ஏன்? இது தான் மத்திய பாஜக அரசின் ராம ராஜ்ஜியமா? நீங்கள் டோக்ரா மற்றும் காஷ்மீரி மக்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்டங்களை மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பீகார் தேர்தல் பரப்புரையில் ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப் பிரிவை ரத்து செய்தது பற்றி பெருமையாக பேசும் பிரதமர் மோடி, நாட்டின் எல்லையை ஆக்கிரமித்திருக்கும் சீனாவின் பெயரை ஒருமுறை கூட பயன்படுத்தாது ஏன்? பீகார் மக்களுக்கு முதலில் சொந்த வீட்டை கட்டி கொடுங்கள். பின் அவர்களை ஜம்முகாஷ்மீரில் நிலம் வாங்கலாம்.” என்று பேசினார்
தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த மெஹ்பூபா முப்தி கடந்த மாதம் தான் விடுவிக்கப்பட்டார். அவர் வந்தவுடன் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்த ஆகஸ்ட் 5-ம் தேதியை ஜம்மு காஷ்மீரின் கருப்பு நாளாக தனது சமூக வலைத்தளங்களில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.