அறிகுறிகள் இல்லாமல் அதிகளவில் குழந்தைகளிடம் பரவும் கொரோனா தொற்று.. பெற்றோர்களே உஷார்..!
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 73.5% பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தகவலளித்துள்ளது.
இளம்வயதினர்களில் கொரோனா வைரஸ் தொற்று சோதனை செய்தவர்களில் கிட்டதட்ட 40% பேர் அறிகுறியற்றவர்கள் என எய்ம்ஸ் புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா நிர்வாகத்தில் இப்போதைய நிலை குறித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் விவாதித்துள்ளனர். அப்போது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே(73.5%) அதிக அறிகுறியற்ற பாதிப்புகள் தான் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சதவீதம் வயதுக்கு ஏற்ப குறைந்தது.
80 வயதுக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 38.4% பேருக்கு மட்டுமே அறிகுறிகள் இல்லாமல் இருந்துள்ளது. அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்பது குறித்து பேசியுள்ள எய்ம்ஸ் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் ஊர்வசி சிங், “பிசிஆர் சோதனையில் பல நோயாளிகளிடம் அறிகுறிகள் இல்லாததால், எந்த நாளில் நாங்கள் அவற்றை மாதிரி செய்கிறோம் என்பது எங்களுக்கு தெரியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.