ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பதவி காலம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்!!
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உடல்நலக்குறைவு காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி விலகுவார் என்ற செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ரஷியாவில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் புதின் அதிபராக இருந்து வருகிறார்.புதினின் பதவிக்காலம் வருகிற 2024-ம் ஆண்டுடன் முடிவடைய இருந்த நிலையில், அவர் மேலும் 12 ஆண்டுகள் அதிபராக இருக்கும் வகையில் கடந்த ஜூலை மாதம் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து புதின் 2036 வரை அதாவது, அவரது 83-வது வயது வரை அதிபராக இருப்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக புதின் அடுத்த ஆண்டு ஜனவரியில் பதவி விலக உள்ளதாக தகவல் வெளியானது. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், புதினுக்கு பக்கவாத நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதாக குறிப்பிட்டுள்ளது. இதனால் உடல்நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுமாறு, புதினை அவரது பெண் தோழியும், 2 மகள்களும் வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் தொடர்ந்து வற்புறுத்துவதால் ஜனவரி மாதம் பதவி விலக புதின் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதினின் சமீபத்திய வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போது, கைப்பிடிகள் உள்ள நாற்காலியில் அமர்ந்தால், வலி ஏற்பட்டதைப் போன்ற உணர்வு அவருக்கு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது கால்களிலும் மாற்றங்கள் தெரிவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதின் பதவி விலக உள்ளார் என்ற தகவலை ரஷ்யாவின் அதிபர் அலுவலகமான கிரெம்ளின் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இது பற்றி கூறுகையில், “ புதின் நலமாக உள்ளார். அவர் பதவி விலக இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் முட்டாள்தனமானது” என்றார்.