அமெரிக்க அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ்.. வெற்றி வாகை சூடினார்கள்!!
![](https://thambattam.com/storage/2020/11/IMG_20201108_000500-780x470.jpg)
உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 3-ம் தேதி நடந்தது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிட்டனர். அவர்களை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் ஆகியோர் களம்கண்டனர்.
வாக்குப்பதிவு முடிந்து மூன்றாவது நாளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தொடர்ந்து இழுபறி நீடித்தது. ட்ரம்பை விட தொடக்கம் முதலே ஜோ பைடன் முன்னிலை பெற்ற நிலையில், முக்கிய மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என டொனால்டு ட்ரம்ப் நீதிமன்றங்களை நாடினார். ஆனால், ட்ரம்ப் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இந்தநிலையில், போட்டியின் முக்கிய மாகாணமாக பென்சில்வேனியாவில் 20 வாக்குகளைப் பெற்ற ஜோ பைடன், மொத்தம் 284 வாக்குகள் பெற்று வெற்றியைத் தனதாக்கினார். அமெரிக்க அதிபராகப் பதவியேற்க 270 உறுப்பினர்களின் வாக்குகள் தேவை என்ற நிலையில், 284 வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருக்கிறார். இதன்மூலம், 1990-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் ஆளும்கட்சி 2-வது முறையாக வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு பின் ஒருமுறை அதிபராக இருந்தவர்களின் வரிசையில் இடம்பெறுகிறார் ட்ரம்ப்.
வெற்றிக்குப் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீதும், துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் மீதும் நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு மதிப்பளிக்கிறேன். கடினமான சூழலிலும் அமெரிக்கர்கள் பெரிய அளவில் வாக்களித்துள்ளனர். இது அமெரிக்க ஜனநாயகத்தின் இதயத் துடிப்பு. பிராசாரங்கள் ஓய்வடைந்திருக்கும் நிலையில், வெறுப்பையும் கோபத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு தேசமாக ஒருங்கிணைவோம். அமெரிக்கா ஒன்றிணைய வேண்டிய நேரமிது. நாம்தான் ஒன்றிணைந்த அமெரிக்கா. நாம் ஒன்றாக இணைந்தால் முடியாதது எதுவுமில்லை’’ என்று அந்த அறிக்கையில் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.