அமெரிக்காவில், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசின் வெற்றிக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்பை தோற்கடித்து, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ள நிலையில், ஜோ பைடன் 290 வாக்குகளைப் பெற்று அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வாகியுள்ளார். அதே வேளையில் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வாகி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வரலாறு படைத்துள்ளார். தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட  முதல் ஆப்ரிக்க-அமெரிக்க பெண் துணை அதிபர் என்ற பெருமையையும் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். இவர்களது இந்த வெற்றிக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டர் பதிவில், “ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், கமலா ஹாரிஸின் வரலாற்று சாதனைக்கும் வாழ்த்துக்கள். அமெரிக்கா எங்கள் மிக முக்கியமான நட்பு நாடு. காலநிலை மாற்றம் முதல் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு வரை நமது பகிரப்பட்ட முன்னுரிமைகள் அனைத்திலும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அமெரிக்காவும், கனடாவும் நெருங்கிய நண்பர்கள், கூட்டாளர்கள் மற்றும் நட்பு நாடுகள். உலக அரங்கில் தனித்துவமான ஒரு உறவை நாம் பகிர்ந்து கொள்கிறோம். உங்கள் இருவருடனும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் ஆவதற்கான அத்தனை தகுதிகளையும் ஜோ பைடன் கொண்டுள்ளார். ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோரை வாழ்த்துவதில் மிகுந்த பெருமை கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்த வெற்றி என்பது வரலாற்றை உருவாக்கும் டிக்கெட், டிரம்பை நிராகரித்தல் மற்றும் அமெரிக்காவிற்கான ஒரு புதிய பக்கம். இதைச் செய்ய உதவிய அனைவருக்கும் நன்றி. முன்னோக்கி, ஒன்றாக நகர்வோம்” என்று கூறியுள்ளார்.

நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க், “நார்வே அரசாங்கத்தின் சார்பாக, ஜோ பைடனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்கா நார்வேயின் மிக முக்கியமான நட்பு நாடு. நாங்கள் பல விவகாரங்களில் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறோம். ஜோ பைடென் மற்றும் கமலா ஹாரிஸ் தலைமையின் கீழ் அமெரிக்காவுடனான எங்கள் ஒத்துழைப்பை வளர்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “வாழ்த்துக்கள் ஜோ பைடன், துணை அதிபராக இருந்த போது இந்திய-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதில் உங்கள் பங்களிப்பு முக்கியமானதாகவும் விலைமதிப்பற்றதாகவும் இருந்தது. இந்திய-அமெரிக்க உறவுகளை அதிக உயரத்திற்கு கொண்டு செல்ல மீண்டும் ஒரு முறை நெருக்கமாக பணியாற்ற ஆவலாக உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.மேலும் தனது மற்றொரு பதிவில் கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “உங்கள் வெற்றி அனைத்து இந்திய-அமெரிக்கர்களுக்கும் மகத்தான பெருமை அளிக்கக் கூடியது ஆகும். உங்கள் ஆதரவு மற்றும் தலைமைத்துவத்துடன் துடிப்பான இந்திய-அமெரிக்க உறவுகள் இன்னும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸின் புத்திசாலித்தனமான மற்றும் முதிர்ச்சியான தலைமையின் கீழ், உலகம் முழுவதும் அமைதியையும் வளர்ச்சியையும் உருவாக்கக் கூடிய ஒரு கூட்டாட்சியை இந்தியா எதிர்பார்க்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, க்ரீஸ், பெல்ஜியம் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x