பள்ளி முதல்வரின் கைப்பையில் இருந்த துப்பாக்கி தோட்டா; சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!!

சென்னை விமான நிலையத்தில் பள்ளி முதல்வரின் கைப்பையில் இருந்த துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை விமானம் சென்றது. முன்னதாக அந்த விமானத்தில் பயணம்
செய்ய வந்திருந்த பயணிகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உத்திரமேரூரை அடுத்த கருங்சோழி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் பீட்டர் (வயது 42) என்பவர் அந்த விமானத்தில் செல்ல வந்தார். அவரது கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ‘ஸ்கேனிங்’ செய்தபோது அதில் வெடிபொருள் இருப்பதாக அலாரம் ஒலித்தது.உடனே பாதுகாப்பு அதிகாரிகள், அவரது கைப்பையை திறந்து பார்த்தனர்.
அதில் 9 எம்.எம். அளவு கொண்ட துப்பாக்கி தோட்டா ஒன்று இருந்தது.
இதையடுத்து செல்வராஜ் பீட்டரின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில், செல்வராஜ் பீட்டர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருவது தெரிந்தது.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்த மாணவா்களை சோதனை செய்தபோது ஒரு மாணவனின் பையில் இருந்து அந்த துப்பாக்கி தோட்டாவை கண்டுபிடித்ததாகவும், அதை தனது பையில் போட்டு வைத்திருந்ததாகவும், தவறுதலாக அந்த பையை எடுத்து
வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக பள்ளி முதல்வரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.