‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்புக்கு தடை; அதிரடியாய் அறிவித்த அரசு

தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1993ஆம் ஆண்டில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரதீப் பிலிப் இந்த அமைப்பை முதன்முதலில் ஏற்படுத்தினார். பின்னர் தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்பட்ட நிலையில் மாவட்டம் தோறும் உள்ள இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வந்தனர்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், திருவிழாக் காலங்களில் காவல்துறையினருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மெம்பர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால் நாளடைவில் இந்த அமைப்பைச் சேர்ந்த பலர் தங்களையே போலீசாக கற்பனை செய்துகொண்டு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினர்.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்திலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்த நிலையில், தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.