“சக அமைச்சரின் மரணத்தைப் பற்றிக் கவலை கொள்ளாது, பதுக்கிய பணத்தை மீட்பதில் குறியாக இருக்கும் அதிமுக அரசு!!” மு.க.ஸ்டாலின் விமர்சனம்!!

அதிகம் அறியப்படாத ஓர் அமைச்சரின் மரண அறிவிப்பில் மர்மம் இருக்கலாம் என்பதைப் புறக்கணிக்க முடியவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா காலத்திலும் ஊழலையே குறிக்கோளாகக் கொண்டுள்ள அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், சக அமைச்சர் மரணமடையும் தருணத்திலும், அதைப் பற்றிச் சிறிதும் கவலைகொள்ளாமல், பதுக்கிய பணத்தை மீட்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள் என்பதைப் பத்திரிகைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன.

அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், தங்களுக்குப் பதவி தந்து வாழ்வளித்ததாக உதட்டளவில் மட்டும் உச்சரிக்கும் அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மத்தையே புதைத்தவர்கள். எளிமையாகத் தோற்றமளித்த – அதிகம் அறியப்படாத ஓர் அமைச்சரின் மரண அறிவிப்பில் மர்மம் இருக்கலாம் என்பதைப் புறக்கணிக்க முடியவில்லை.

நெருப்பில்லாமல் புகையாது என்பதால், இந்தச் செய்திகள் உண்மைதான் என்று மக்கள் நம்புகிறார்கள். பத்திரிகையில் வந்த செய்திகளை மட்டும் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டலாமா என ஆளுந்தரப்பினர் இதையும்கூட மரணக்குழியில் போட்டுப் புதைக்க நினைக்கலாம். ஆனால், அவர்களால் ஊழல் நாற்றத்தை மறைக்க முடியாது என்பதற்கு காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளே சான்றாக இருக்கின்றன.

கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில், சீட் பேரத்திற்காக இந்த ஊழல் மோசடிகளை வேடிக்கை பார்த்தபடி சப்தமில்லாமல் அனுமதிக்கிறதா மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜக. அரசு? மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால், அ.தி.மு.க.வின் பகல்கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு குறித்து அதிமுக தரப்பில் இருந்து இதுவரை பதில் அறிக்கை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x