“அமெரிக்க தேர்தல் முடிவுகள், இதுவரை அறிவிக்கப்படவில்லை” – சீன செய்தி தொடர்பாளர்
![](https://thambattam.com/storage/2020/11/1604919665516.jpeg)
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் வெற்றதாக செய்திகள் வெளியாகியும், சீனா இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொடர்ந்து சீனாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். இரு நாட்டுக்கும் இடையேயான வர்த்தகமும் இதனால் பாதிக்கப்பட்டது.
‘ஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கான வெற்றி. அமெரிக்காவை, சீனா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும்’ என, டிரம்ப் கூறி வந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில், பிடன் வென்றதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து, பல நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து செய்திகளை வெளியிட்டனர்.
ஆனால், சீனா, ரஷ்யா, மெக்சிகோ உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. பிடன் வெற்றி குறித்து, சீன ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், அரசு தரப்பில் எதுவும் கூறப்படவில்லை.
இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் வாங்க் வென்பின் கூறியதாவது:
பிடன் வென்றதாக, ஊடகங்கள்தான் செய்தி வெளியிட்டு வருகின்றன. அதிபர் தேர்தல் முடிவுகள், அந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படிதான் அறிவிக்கப்பட வேண்டும். இதுவரை அவ்வாறு அறிவிக்கப்படவில்லை. அதனால், சீன அரசு தரப்பில் எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.