அமெரிக்கவின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 90% பேருக்கு பலன்!!
![](https://thambattam.com/storage/2020/11/IMG_20201110_123155.jpg)
அமெரிக்கவின் ஃபைசர் மற்றும் ஜெர்மனியின் பயோ என்டெக் மருந்து நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி அது செலுத்தப்பட்ட 90% பேருக்கு பலன் தந்துள்ளது உறுதியாகியுள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், அர்ஜென்டினா, தென் ஆப்ரிக்கா, துருக்கி ஆகிய ஆறு நாடுகளில் மொத்தம் 43,500 பேருக்கு ஃபைசர் மற்றும் பயோ என்டெக் தயாரித்த தடுப்பு மருந்து செலுத்தி சோதிக்கப்பட்டது. அதில், இரண்டாவது ஊசி செலுத்திய ஒரு வாரத்தில், 90 சதவிகிதம் பேருக்கு கொரோனா ஏற்படாமல் தடுத்திருப்பது தெரிய வந்திருக்கிறது. தவிர இதுவரை யாருக்கும் பெரிய அளவிலான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த வெற்றியை தொடர்ந்து, இம்மாத இறுதிக்குள் இந்த தடுப்பு மருந்துக்கு அவசரகால அனுமதியை வழங்க வேண்டும் என ஃபைசர் மற்றும் பயோ என்டெக் மருந்து நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தடுப்பு மருந்துக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி ஊசிகள் விநியோகிக்க முடியும் என ஃபைசர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதே நேரம், மருந்துகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதுதான் தற்போது சவாலான பணியாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தடுப்பு மருந்து கெடாமல் பார்த்துக் கொள்ள மைனஸ் 80 டிகிரி சென்டிகிரேட்டு அளவிலான அல்ட்ரா குளிர்சாதன வசதி தேவைப்படுகிறது. இதற்கிடையில் கொரோனாத தடுப்பூசி வெற்றி அறிவிக்கப்பட்டுள்ள இந்த நாள் மனித குலத்திற்கே மிகச்சிறந்த நாள் என ஃபைசர் நிறுவன தலைமை அதிகாரி ALBERT BOURLA தெரிவித்துள்ளார். உற்சாகம் தரும் இந்த செய்தியை வரவேற்பதாக சர்வதேச சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதனம் கெப்ரிசிஸ் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி வரும் கிறிஸ்துமசுக்குள் தயாராகி விடும் என எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து நாட்டு மருத்துவ துறை தெரிவித்துள்ளது