“கொரோனா இன்னும் சோர்வு அடையவில்லை.” உலக மக்களை எச்சரிக்கும் WHO தலைவர்!!!
நாம் கொரோனா வைரஸ் உடன் சோர்வடைந்து இருக்கலாம், ஆனால் அது நம்மிடம் சோர்வாக இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் உலக மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு உலக சுகாதார அமைப்பும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இதற்கிடையே, அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம், கொரோனா பாதித்த நபருடன் தொடர்பு கொண்டதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பிறகு, நேற்று (நவ.,09) நடந்த உலக சுகாதார அமைப்பின் முக்கிய வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது டெட்ராஸ் அதானோம் பேசுகையில், “நாம் கொரோனா வைரஸ் உடன் சோர்வடைந்து இருக்கலாம், ஆனால் அது நம்மிடம் சோர்வாக இல்லை. கொரோனா தம்மை விட பலவீனமானவர்களை வேட்டையாடுகிறது. இது மற்ற பிரிவுகளையும் பாதிக்கிறது. வரும் நாட்களில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து விடலாம். ஆனால் அது ஏற்படுத்தியுள்ள வறுமை, பசி, காலநிலை மாற்றம் மற்றும் சமத்துவமின்மைக்கு தடுப்பூசி எதுவும் இல்லை.” இவ்வாறு அவர் கூறினார்.