கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் 1 கோடியை கடந்த அமெரிக்கா!
கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கபட்ட வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினம் தோறும் அதிகரித்துவரும் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.
இருப்பினும் அங்கு நோய் தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதோடு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளும் தீவிரமடைந்துள்ளன. மேலும் அங்கு கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பரிசோதனையில் உள்ள கொரோனா தடுப்பு மருந்துகளை பயன்படுத்தவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட்வர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. இது தொடர்பாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளிட்டுள்ள அறிக்கையில் கடந்த சில நாட்களாக தினம் தோறும் பதிவாகும் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளதாகவும் ஒரு நாளைக்கு சராசரியாக 1,09,000 பாதிப்புகள் பதிவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழப்போரில் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் சராசரியாக ஒரு நாளைக்கு 939 பேர் கொரோனாவால் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் 1 கோடியே 2 லட்சம் பேர் பாதிக்கப்படுள்ளதோடு 2,37,000 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.