“அரசு அனுமதியின்றி எப்படி யாத்திரை செல்ல முடியும்?” வேல் யாத்திரை வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!!
![](https://thambattam.com/storage/2020/11/Velyatra_BJP_EPS-780x450.jpg)
அரசு அனுமதி அளிக்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும்? என்று கேள்விக்கேட்ட நீதிபதிகள், வேல் யாத்திரைக்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கையும் தள்ளுபடி செய்தனர்.
தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை நவம்பர் 6 ஆம் தேதி திருத்தணியில் தொடங்கி டிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து குறைந்த அளவு நபர்களே செல்வோம் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், விதிகளை மீறியதால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், டிஜிபி தரப்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “வேல் யாத்திரையின் போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டனர். பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட யாத்திரையில் பங்கேற்போர் ஒருவர் கூட பல இடங்களில் முகக்கவசம் அணியவில்லை. தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை.
பல இடங்களில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுகின்றனர். அவர்கள் பேப்பரில் கொடுத்ததும், நீதிமன்றத்தில் சொல்வதும் வெவ்வேறாக உள்ளது. ஒரு மணி நேரத்தில் 10 கிலோமீட்டருக்கு குறைவாகவே அவர்கள் சென்றதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். வேல் யாத்திரை, கோவில் யாத்திரை அல்ல; முழுக்க முழுக்க அரசியல் யாத்திரையே” என வாதிடப்பட்டது.
தொடர்ந்து வழக்கில் விசாரணை செய்த நீதிபதிகள் “வேல் ஒரு ஆயுதம், ஆயுத சட்டப்படி அது தடை செய்யப்பட்டது. அரசு அனுமதி அளிக்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும்? அரசு அனுமதி பெறும் வரை பொறுத்திருக்காமல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்? தவறான செயலை நியாயப்படுத்தாதீர்கள். பாஜகவின் வேல் யாத்திரையால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை ஊடகங்களில் பார்த்தோம்” என கண்டித்த நீதிபதிகள், வேல் யாத்திரை தொடர்பான பாஜகவின் இரண்டாவது மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.