டாக்டராக வேலைப் பார்த்த கம்பவுண்டரால் பறிபோன குழந்தையின் உயிர்!!!

அசாமில் இறந்துவிட்டதாகக் கூறிய குழந்தை இறுதிச்சடங்கின் போது கண் விழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் மாவட்டத்தில் தேயிலை தோட்ட மருத்துவமனை உள்ளது. தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று ஒரு தம்பதி 2 மாதக் குழந்தையை தூக்கிக் கொண்டு சிகிச்சைக்காக முட்டாக் தேயிலை தோட்ட மருத்துவமனைக்கு வந்துள்ளனர். ஆனால் அந்த நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவர்களோ, செவிலியர்களோ இல்லை. கம்பவுண்டர் மட்டுமே இருந்துள்ளார்.
குழந்தையை பரிசோதித்த அவர் குழந்தை இறந்துவிட்டது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தம்பதி குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டனர். குழந்தைக்கான இறுதிச்சடங்கு வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் தாயின் மடியில் இருந்த குழந்தை கண் விழித்து அசைந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்த தாயும், தந்தையும் மறுபடி குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து குழந்தை அசாம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தேயிலை தோட்ட மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டினர். குழந்தைக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் ஒரு உயிர் பிழைத்திருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனையின் கம்பவுண்டருக்கு எதிராக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். பின்னர் தன்னுடைய வீட்டில் இருந்த கம்பவுண்டரை போலீசார் கைது செய்தனர்.