“தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனே பாஜக வேல் யாத்திரை நடத்துகிறது!” நாராயணசாமி குற்றச்சாட்டு!!
![](https://thambattam.com/storage/2020/10/narayanasamy_cm-780x470.jpg)
“பிஹாரில் மோடி அலை எதுவும் வீசவில்லை, மோடி அலை என்பது ஒரு மாயை” என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள பூங்காவில் இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்து நாராயணசாமி பேசுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 96 சதவீதம் பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். உயிரிழப்பு விகிதம் 1.6 சதவீதமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 14.5 லட்சம் மக்கள்தொகையில், இதுவரை 3.5 லட்சம் பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் கணக்குப்படி 5 சதவீத மக்களுக்குப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால், புதுச்சேரியில் 23 சதவீத மக்களுக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது.
அதிக அளவில் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டதால் இந்தியாவிலேயே 96 சதவீதம் குணமடைந்தோர் உள்ள மாநிலமாகவும், அதிக அளவில் பரிசோதனை செய்த மாநிலமாகவும் புதுச்சேரி உள்ளது. இதற்கு மருத்துவக் குழுவினர் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள், தொடர்புடைய துறையினர் அனைவரும் நன்றிக்குரியவர்கள்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புகள் கிடைக்காத நிலை காரணமாக, புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடுவதற்காகத் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
அரசாணை வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், இது கொள்கை முடிவு எனக் கூறி ஆளுநர், மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். தமிழகத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் ஆளுநர் ஒப்புதல் அளித்தார். ஆனால், புதுச்சேரி ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது விதிகளுக்குப் புறம்பானது.
வாக்குப்பதிவு இயந்திரக் குளறுபடிகள் குறித்து அனைத்துக் கட்சிகளும் பல்வேறு விமர்சனங்கள், கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில், அவற்றைத் தவிர்ப்பதற்கு வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்றுவதே எல்லாச் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்வதாக அமையும்.
பிஹாரில் மோடியின் அலை வீசியிருந்தால் பாஜகவை விட ராஷ்டிரிய ஜனதா தளம் அதிக இடங்களில் வென்றது எப்படி? இரு கூட்டணிகளுக்குமான இடைவெளி குறைவாக இருப்பது ஏன்? பிஹாரில் மோடி அலை வீசவில்லை. அது ஒரு மாயை. மக்கள் மத்தியில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் உள் நோக்கத்துடன் தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரை நடத்துகிறது. புதுச்சேரியில் இதற்கு அனுமதி அளிக்கப்படாது.” இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.